சென்னை: சென்னையை தலைமை இடமாகக் கொண்ட சைர்மா டெக்னாலஜி (Syrma SGS) நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனத்திற்கான டைனா புக் (Dynabook) நிறுவனத்துக்கு தேவையான லேப்டாப்களை தயாரித்து வழங்க இருக்கிறது. சென்னையில் இருக்கும் புதிய ஆலையில் லேப்டாப் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைனாபுக் என்பது ஜப்பானை தலைமையிடமாக கொண்டு 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கணினி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் வணிக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் தேவைப்படக்கூடிய லேப்டாப்கள் மற்றும் கணினிகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் சிங்கப்பூரில் டைனாபுக் சிங்கப்பூர் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. தற்போது டைனாபுக் சிங்கப்பூர் நிறுவனத்திற்கும் சைர்மா எஸ்ஜிஎஸ் டெக்னாலஜி நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருக்கிறது.
மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மின்னணு சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவித்து வரும் நிலையில் இந்த லேப்டாப் உற்பத்தி ஒப்பந்தத்தில் எஸ்ஜிஎஸ் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. மத்திய அரசினை பொறுத்தவரை இந்தியாவில் மின்னணு சாதன உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட நிதியுதவிகளையும் வழங்கி வருவது. இந்த திட்டத்தின் கீழ் எஸ்ஜிஎஸ் நிறுவனம் நிதி உதவிகளை பெறும் என சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு அரசும் மின்னணு சாதன உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சைர்மா நிறுவனம் சென்னையில் உள்ள தங்களின் புதிய ஆலையில் லேப்டாப் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இந்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என டைனா புக் சிங்கப்பூர் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் வாங் குவா தெரிவித்துள்ளார்.
டைனா புக் நிறுவனத்தின் உயர்தரமான தொழில்நுட்பத்தை இந்தியாவில் கொண்டு வந்து அவர்களுக்கான லேப்டாப்களை உற்பத்தி செய்து அவர்கள் பிராண்ட் லேப்டாப்பை இந்திய வாடிக்கையாளர்களிடமும் கொண்டு சேர்ப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என சைர்மா எஸ்ஜிஎஸ் நிறுவனத்தின் தலைவர் சத்தேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.
சைர்மா எஸ்ஜிஎஸ் டெக்னாலஜி என்பது கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக இந்தியாவில் ஐடி துறை சம்பந்தப்பட்ட சாதனங்களை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. மெமரி கார்டுகள், எஸ்.எஸ்.டி, மதர்போர்டு, பவர் அடாப்டிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. சென்னை ஆலையில் லேப்டாப் உற்பத்தி செய்யப்படுவதால் இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications