சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்ப்பதற்காக பல்வேறு பகுதிகளிலும் மேம்பாலங்களை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் பகுதியில் கட்டப்பட்டு வரக்கூடிய மேம்பாலங்கள் மே மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தி.நகரை பொருத்தவரை ரங்கநாதன் தெருவில் இருந்து 1.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சிஐடி நகரில் இருந்து கட்டப்படக்கூடிய இந்த மேம்பாலத்தை ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் உஸ்மான் ரோடு மேம்பாலத்துடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போல வடக்கு உஸ்மான் சாலையை அகலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கடந்த டிசம்பரிலேயே இந்த பணிகள் நிறைவடையும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கட்டப்பட்டு வரக்கூடிய இந்த இரண்டு வழி கொண்ட மேம்பாலம் மேட்லி சந்திப்பு அருகே ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் மேம்பாலத்தை விட சற்றே உயரமாக வருவதால் அந்த இடத்தில் சில பணிகளை மேற்கொள்ள இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனால் சிஐடி நகரிலிருந்து வரக்கூடிய மேம்பாலமானது ரங்கநாதன் தெருவுக்கு முன்னரே முடிவடைந்து விடும் என்றும் அங்கிருந்து 100 மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் சாலையில் பயணித்து உஸ்மான் ரோடு மேம்பாலத்தில் ஏற வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இதற்கு அருகிலேயே சர்வீஸ் சாலைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பணிகள் நிறைவடைந்த உடன் இந்த புதிய தி.நகர் மேம்பாலமானது சிஐடி நகரில் இருந்து பனகல் பார்க் வரை நேரடியாக செல்வதற்கான ஒரு இணைப்பை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கே. என். நேரு சென்னையில் தி.நகர் மற்றும் ஆர்கே நகரில் கட்டப்பட்டு வரக்கூடிய மேம்பாலங்கள் மே மாதத்தில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
மேலும் பாடி கணேசபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரக்கூடிய மேம்பாலப் பணிகள் அங்கே ரயில்வே பாதை பணிகள் நடைபெற்று வருவதால் தாமதமாகி வருவதாகவும், இதன் காரணமாக கட்டுமான பணிகள் இன்னும் மூன்று மாத காலம் தாமதமாகும் எனவும் தெரிவித்தார். நகரின் மற்ற பகுதிகளில் நடைபெறும் மேம்பால பணிகள் விரைவில் முடிவடையும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக சட்டப்பேரவையில் வடசென்னை சட்டமன்ற உறுப்பினர் ஆர். மூர்த்தி நகரில் பல்வேறு மேம்பால கட்டுமான பணிகளும் மந்தமான நிலையில் நடைபெற்று வருவதாக கூறியிருந்தார். குறிப்பாக 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொருக்குப்பேட்டை பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள இரண்டு வழி கொண்ட மேம்பால பணிகள் பல மாதங்களாக நடைபெறாமலே இருப்பதால் மக்கள் தினம்தோறும் பல கிலோமீட்டர் கூடுதலாக பயணம் செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அதிகாரிகள் இந்த மேம்பால பணிகள் விரைவில் முடிவடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் நொளம்பூர் பகுதியில் கூவம் நதியின் மேலே இரண்டு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன அந்த பணிகள் ஜூலை மாதத்துடன் நிறைவடையும் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications