ICC ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை 2024 க்கான பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக, இந்த தொடருக்கான மொத்த பரிசுத் தொகையாக 11.25 மில்லியன் டாலரை அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 88.12 கோடி ரூபாயாகும்.
இதில், வெற்றி பெறும் அணிக்குக் குறைந்தது 2.45 மில்லியன் டாலர் அதாவது 19.03 கோடி ரூபாய் கிடைக்கும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.28 மில்லியன் டாலர் (சுமார் ₹10.01 கோடி) பரிசுத் தொகை வழங்கப்படும்.

மேலும், அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இரண்டு அணிகளுக்கும் தலா 787,500 டாலர் (சுமார் ₹6.16 கோடி) பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ICC தெரிவித்துள்ளது.
இந்த டி20 உலகக் கோப்பை, அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள ஒன்பது மைதானங்களில் 28 நாட்கள் நடத்தப்படவுள்ளது. மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவுள்ளது, ஐசிசி நடத்தும் மிகப்பெரிய டி20 உலகக் கோப்பை தொடராக இது இருக்கப்போகிறது.
20 அணிகள் பங்கேற்கும் இந்த ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்கு, டி20 வரலாற்றிலேயே அதிகபட்ச பரிசுத் தொகையாக $2.45 மில்லியன் வழங்கப்படும். இதோடு சாம்பியன் பட்டத்தை ஜூன் 29 ஆம் தேதி பார்படோஸில் உள்ள கென்சிங்டன் ஓவலில் வழங்கப்படும் என்று ஐசிசி தனது அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
அரை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அணிகளுக்கு தலா 787,500 டாலர் வழங்கப்படும் என்றும், இரண்டாம் சுற்றுக்கு மேல் செல்லாத அணிகளுக்கு தலா 382,500 டாலர் வழங்கப்படும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. ஒன்பதாவது முதல் பன்னிரண்டாவது இடம் வரை பிடிக்கும் அணிகளுக்கு தலா 247,500 டாலர் வழங்கப்படும்.
13 ஆம் இடம் முதல் 20 ஆம் இடம் வரை வரும் அணிகளுக்கு தலா 225,000 டாலர் வழங்கப்படும் என்று ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் தவிர்த்து மற்ற ஒவ்வொரு போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கூடுதலாக 31,154 டாலர் பெறுவார்கள்.
ஜூன் 1 ஆம் தேதி தொடங்கிய இந்த டி20 உலகக் கோப்பை தொடரில், முதல் சுற்றில் 40 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து 12 சூப்பர் 8 போட்டிகள் நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் கயானாவில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி பார்படோஸில் உள்ள கென்சிங்டன் ஓவலில் நடைபெறும்.


Click it and Unblock the Notifications