இந்திய கிரிக்கெட் அணி சனிக்கிழமையன்று பார்படோஸில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 11 ஆண்டுகள் காத்திருந்திருப்புக்குப் பின்பு மீண்டும் உலக கோப்பையை வென்றுள்ளது இந்தியா. தோனி தலைமைக்குப் பின்பு இந்தியாவுக்கு உலக கோப்பையைப் பெற்றுக் கொடுத்தது ரோஹித் என்பதில் தனி கெத்து உள்ளது.
ஐபிஎல் போட்டியில் ரோஹித்-ன் மும்பை இந்தியன்ஸ் அணி மோசமாக விளையாடியது மட்டும் அல்லாமல் ஹர்திக் பாண்டியா - ரோஹித் மத்தியிலான பிரச்சனை மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் மோசமான ஆட்டத்தை ஐபிஎல் போட்டியில் வெளிப்படுத்தினார் ரோஹித்.

ஆனால் டி20 உலகக் கோப்பை போட்டியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி ஆரம்பம் முதல் இறுதிப்போட்டி வரையில் ஓரிரு போட்டிகளை தவிர அனைத்து போட்டிகளிலும் கடுமையான போராட்டத்திற்குப் பின்னரே வெற்றிபெற்றனர். இறுதிப்போட்டியும் அவ்வாறே நடந்தது.
ஆனால், இந்த போராட்டம் கலந்த வெற்றி, கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியில், கிரிக்கெட் வீரர்களின் சந்தை மதிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் விளம்பர உலகின் தற்போதைய முக்கிய பேச்சாக உள்ளது.
உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் பதினொரு வீரர்களின் மொத்த வணிக மதிப்பு பல பில்லியன் டாலர் அளவில் உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக ஐபிஎல் தொடரின் சந்தை மதிப்பைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்துள்ளது என கருத்து நிலவுகிறது.
முதலீட்டு வங்கியான ஹோலிஹான் லோக்கே (Houlihan Lokey) மதிப்பீட்டின் படி, ஐபிஎல் தொடரின் மொத்த சந்தை மதிப்பு தற்போது 16.4 பில்லியன் டாலராகும், அதாவது 1,36,858 கோடி ரூபாயாகும். டி20 உலகக் கோப்பை போட்டி வெற்றிக்கு பின்பு, முக்கிய ஆட்டக்காரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் சந்தை மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ள விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஏற்கனவே கையெழுத்திட்டு உள்ள சில விளம்பர ஒப்பந்தங்களில் சில தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த சில ஒப்பந்தங்களின் மதிப்பு உலக கோப்பை-க்கு பின்பு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இதேபோல் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ஷிவம் துபே போன்ற முக்கிய ஸ்டார் வீரர்களின் ஒப்பந்த மதிப்பும் குறைந்தது 50 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
விளம்பர சந்தையில் டி20 இந்திய அணியின் மொத்த மதிப்பு பல பில்லியன் ரூபாயாக இருக்கும் என்று ரெடிஃப்யூஷன் (Rediffusion) நிறுவனத்தின் தலைமை அதிகாரி சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார். 11 ஆண்டுகளுக்கு பின்பு பெற்ற கோப்பையும், வெற்றியும் வீரர்களின் நினைவிலும், ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடம் பிடிக்கும். இதன் மூலம் அளவிட முடியாத அளவிற்கு வீரர்களின் மார்கெட்டிங் சந்தை மதிப்பு அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மறுமுனையில் இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் ஜெய் ஷா தனது ட்விட்டரில் பரிசுத்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 வெற்றிக்காக இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் அளவிலான பரிசு தொகையை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications