தைவான்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்வாகி இருக்கும் நிலையில் சீன பொருட்களுக்கான வரியை அதிகரிக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சீனாவில் செயல்பட்டு வரக்கூடிய தைவான் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் தற்போது தங்களுடைய ஆலைகளை வேறு நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தைவான் வர்த்தகத் துறை அமைச்சகம் சீனாவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்ற விரும்பும் தைவான் நாட்டு நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற உடன் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 60% வரை உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன்னுடைய தேர்தல் பரப்புரையின் போது கூட டொனால்ட் டிரம்ப் இந்த வாக்குறுதியை முன் வைத்திருந்தார்.
சீனாவில் தயாரிக்கும் எந்த ஒரு பொருளும் அமெரிக்கா மண்ணிற்குள் வரவேண்டும் என்றால் 60% வரை இறக்குமதி வரி செலுத்தியாக வேண்டும் என அப்போது அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் தைவான் அரசு, சீனாவில் செயல்பட்டு வரும் தங்கள் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு இடமாற விரும்பினால் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என தெரிவித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் தைவானை சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை சீனாவில் தான் நிறுவி இருக்கின்றன.
2019 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதை அடுத்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டது. சீன பொருட்களுக்கு அதிகபட்ச வரி என்ற நடைமுறையை டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்தார்.
இதனால் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக தொகை செலுத்த வேண்டியதாக இருந்தது. இதன் காரணமாகவே பெரும்பாலான நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவின.
தற்போது மீண்டும் அப்படி ஒரு சூழல் உண்டாகியுள்ளதால் தைவான் நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளை நோக்கி படையெடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஆலைகளை நிறுவும் என சொல்லப்படுகிறது. எனவே டிரம்ப் எடுக்கும் முடிவு தமிழ்நாட்டிற்கு சாதகமானதாக அமையும்.
ஏனெனில் இந்தியாவில் செயல்படக்கூடிய தைவான் நிறுவனங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் தான் தங்களுடைய ஆலைகளை நிறுவியுள்ளன. மின்னணு உற்பத்தி சாதனங்கள் மற்றும் காலணி உற்பத்தியில் ஈடுபடக்கூடிய ஃபாக்ஸ் கான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய ஆலைகளை பெருமளவில் தமிழ்நாட்டில் தான் செயல்படுத்தி வருகின்றன.


Click it and Unblock the Notifications