தைவான் நாட்டின் கிழக்கு ஹுவாலியன் (Hualien) பகுதியில் ரிக்டர் அளவில் 5.5 என்ற பலத்த நிலநடுக்கம் திங்கட்கிழமை மாலை 5:08 மணியளவில் ஏற்பட்டதாக அந்நாட்டு மத்திய வானிலை ஆய்வு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் செய்தி நிறுவன AFP பத்திரிகையாளர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இது கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவு பேரழிவு நிலநடுக்கத்தின் மையப்பகுதி தான் இந்த Hualien.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தால் ஹுவாலியன் மலைப்பகுதியில் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் ஹுவாலியன் நகரின் கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர். கடைசியாக ஏப்ரல் 13ஆம் தேதி ஒரு கல் குவாரியில் மீட்புப் பணியின்போது மற்றொரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகரான தாய்பே-யிலும் உணரப்பட்டது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) இதன் அளவை 5.3 ரிக்டர் என்றும் நிலநடுக்கம் ஏற்பட்ட ஆழத்தை 8.9 கிலோமீட்டர் என்றும் கணக்கிட்டு உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தில் இருந்து மீளாத மக்களுக்கு ஒரே மாதத்தில் 2வது நிலநடுக்கம் என்பதும் பெரும் அதிர்ச்சி கலந்த பயத்தை கொடுத்துள்ளது. ஏப்ரல் 3 ஆம் தேதி நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று மாலை பதிவான நிலநடுக்கம் பெரியது என்று AFP பத்திரிகையாளர் தெரிவித்தார்.
ஹுவாலியன் தீயணைப்புத் துறை தங்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய குழுக்களை அனுப்பியுள்ளதாகத் தனது பதிவில் தெரிவித்துள்ளது. மேலும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களை உரிய நேரத்தில் தெரிவிப்போம்" என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தைவான் இரண்டு பெரிய நிலத்தட்டுகளின் சந்திப்பில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏப்ரல் 3 ஆம் தேதி நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் அந்நாட்டின் சிப் உற்பத்தியை தற்காலிகமாக முடக்கியது. இந்த நிலையில் இன்றைய நிலநடுக்கமும் சிப் உற்பத்தியை பாதிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications