அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று தைவான் நாட்டை சேர்ந்த செமி கண்டக்டர் நிறுவனம் அமெரிக்காவின் இன்டெல் நிறுவன தொழிற்சாலைகளில் சிப் உற்பத்தியை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த இன்டெல் நிறுவனம் அனைத்து வகையான கணினிகளுக்குமான பிராசசர்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது.
ஆனால் அண்மை காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட சிப்களின் வருகையால் இன்டெல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.

சம கால போட்டிக்கு ஏற்ப இன்டெல் நிறுவனத்தால் போட்டிபோட முடியவில்லை. இந்த நிலையில் இன்டெல் நிறுவனத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் முயற்சியாக டிரம்ப் நிர்வாகம் தைவானை சேர்ந்த செமி கண்டக்டர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் டிஎஸ்எம்சி எனப்படும் தைவான் செமி கண்டக்டர் மனுஃபேக்சரிங் கம்பெனி , இன்டெல் நிறுவனத்தின் ஆலைகளில் கணிசமான பங்கை கையகப்படுத்தி உற்பத்தியை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் உற்பத்தியை பெருக்க வேண்டும், முக்கியமான தொழில்நுட்பங்களில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு டிரம்ப் நிர்வாகம் இந்த கோரிக்கையை தைவான் நிறுவனத்திடம் முன்வைத்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்து இடுவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எந்த வகையிலான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கும் இடையே ஏற்படும் என்பது தெரியவில்லை. தற்போது உலக அளவில் நவீன சிப்கள் தயாரிப்பில் டிஎஸ்எம்சி நிறுவனம் தான் முன்னிலையில் இருக்கிறது. இதனை இன்டெல் நிறுவன ஆலைகளில் பயன்படுத்த அனுமதி தந்தால் அது அமெரிக்காவிலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.
தற்போது டிஎஸ்எம்சி நிறுவனம் தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், மேக் கணினிகள் ஆகியவற்றுக்கு தேவையான சிப்களை தயாரித்து வருகிறது. அதேபோல என்விடியா கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு தேவையான செமி கண்டக்டர்களையும் இந்த நிறுவனம்தான் தயாரித்து வழங்கி வருகிறது. குறிப்பாக இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய சிப்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அமெரிக்காவை சேர்ந்த இன்டெல் நிறுவனம் தொடர்ந்து தொழிலில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. சர்வதேச அளவில் இதன் பிராசஸர்களை வாங்கி பயன்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனால் இதன் உற்பத்தி ஆலைகள் செயல்படாமல் இருக்கின்றன. ஏற்கனவே பைடன் நிர்வாகம் இது தொடர்பாக தைவான் நிறுவனத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில் டிரம்ப் நிர்வாகம் மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications