தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் ஒரு முக்கிய அங்கமாக, தைவான் நாட்டின் மிகப்பெரிய காலணி உற்பத்தி நிறுவனமான Hong Fu, ராணிப்பேட்டை மாவட்டத்தின் பனப்பாக்கத்தில் தனது பிரம்மாண்டமான உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் திட்டத்தின் அடிக்கல் நாட்டுதல் விழா இன்று நடந்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் ஏப்ரலில் நடந்த உலகளாவிய முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்த திட்டம் தற்போது கட்டுமான நிலைக்கு வந்துள்ளது. ராணிப்பேட்டை ஏற்கனவே காலணி தயாரிப்பில் முக்கிய இடத்தில் இருந்தாலும் Hong Fu வருகை மூலம் அம்மாவட்டத்தின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் வளர உள்ளது.

இந்த புதிய Hong Fu தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில், 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். இந்த தொழிற்சாலையில் சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழிற்சாலை பனப்பாக்கம் மெகா தோல் தொழிற்பூங்காவில் அமைய உள்ளது. அதில் பெரும்பகுதி வேலைவாய்ப்புகள் கிராமப்புற பெண்களுக்கு வழங்கப்படும். இது தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு நிதி சுதந்திரம், அதிகாரமளிக்கும் மற்றும் சமத்துவ வளர்ச்சி முயற்சிகளில் முக்கியமானதாக இருக்கும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த நவீன தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலம், அந்த பகுதி ஒரு முக்கியமான காலணி உற்பத்தி மையமாக உருவெடுக்கும்.
இதேவேளையில் 470 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு 5,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் டாடா-ஜேஎல்ஆர் தொழிற்சாலை என்னும் மற்றொரு மாபெரும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் ராணிப்பேட்டை தொழிற்துறையிலும், ஏற்றுமதியிலும் பெரிய அளவில் முன்னேற உள்ளது.
தமிழ்நாடு அரசு டாடா-ஜேஎல்ஆர் ஆலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு துணை தொழில்துறை பூங்காவை உருவாக்கும் திட்டத்தை வகுத்துள்ளது. கூடுதலாக, மாநில தொழில்துறை மேம்பாட்டு நிறுவனமான சிப்காட், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், மருத்துவ மையங்கள் மற்றும் மாநாட்டு மையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டமைப்புகளை கட்டமைக்க டெண்டர் விட்டுள்ளது.
பாரந்தூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ராணிப்பேட்டை அமைந்துள்ளதால், அப்பகுதியில் செயல்படும் வணிகங்களுக்கு கூடுதல் பலன் அடையும். சென்னை - பெங்களூர் தொழிற்துறை பகுதியில் புதிய இண்டஸ்ட்ரீயல் ஹப் ஆக மாறும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடுத்தடுத்து முக்கிய முதலீடுகளையும், விரிவாக்கத்தையும் பெற்று வருகிறது.
ராணிப்பேட்டை அமைந்துள்ள இடம் ஏற்றுமதிக்கும், குறைவான ரியல் எஸ்டேட் விலை, அதிகப்படியான திறமைமிக்க ஊழியர்கள், சென்னை துறைமுகங்கள் உடன் இணைப்பு, பிற தொழிற்துறை பகுதி உடனான இணைப்பு என பல நன்மைகளைக் கொண்டு இருக்கும் காரணத்தால் குட்டி ஓசூர், குட்டி ஸ்ரீபெரும்புதூராகவும் உருவெடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications