நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஒப்புதல் பெறப்பட்ட ஊழியர்களின் சம்பளம் குறித்த மசோதா வருகிற ஏப்ரல் 1, 2021 முதல் அமலாக்கம் செய்யப்படும் நிலையில் பெரும்பாலான தனியார் ஊழியர்களின் டேக் ஹோம் சேலரி குறையும்.
புதிய சம்பள கொள்கையின் படி ஊழியர்களின் பிஎப் மற்றும் கிராஜுவிட்டி அளவுகள் அதிகரிக்கும் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தின் அளவு குறையும்.

தனியார் நிறுவனங்கள்
இந்தப் புதிய விதி மாற்றங்கள் மூலம் பெரிதும் பாதிக்கப்படப் போவதும் தனியார் நிறுவன ஊழியர்கள் தான். தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தில் அடிப்படை சம்பளத்தை மிகவும் குறைவாகக் கொடுத்து வருகிறது. இந்த விதிமுறையை புதிய சட்டத்தின் கீழ் செல்லுபடி ஆகாது.

புதிய விதிமுறை
நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட விதிமுறையின் படி ஊழியர்களின் அடிப்படை தளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் கொடுப்பனவு (Allowance) இருக்கக் கூடாது. இதனால் நிறுவனங்கள் கண்டிப்பாக அடிப்படை சம்பளத்தை அதிகரித்தாக வேண்டும். இப்படி அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் போது பிராவிடெண்ட் பண்ட் மற்றும் கிராஜுவிட்டிக்காகப் பிடிக்கப்படும் பணத்தின் அளவு அதிகரிக்கும்.

மொத்த சம்பளம்
தற்போது பெரும்பாலான நிறுவனத்தில் ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் 25 முதல் 40 சதவீதம் தொகையை அடிப்படை சம்பளமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த அடிப்படை சம்பளத்தை வைத்துத் தான் பிஎப் மற்றும் கிராஜூவிட்டி கணக்கிடப்படுகிறது.
தற்போது புதிய விதிமுறையின் கீழ் அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் 50 சதவீதமாக உயரும் போது பிஎப் மற்றும் கிராஜூவிட்டிக்குப் பிடிக்கப்படும் அளவும் அதிகரிக்கப்படும்.

டேக் ஹோம் சேலரி
பிராவிடெண்ட் பண்ட் மற்றும் கிராஜுவிட்டிக்காகப் பிடிக்கப்படும் பணத்தின் அளவு அதிகரிக்கும் காரணத்தால் ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் கையில் பெரும் சம்பளத்தின் அளவு குறையும்.

மக்களுக்கு நல்லது
இந்தப் புதிய கொள்கையின் மூலம் மக்களுக்குக் கூடுதல் நன்மை கிடைக்கும், ஓய்வு பெறும் போது அதிகளவிலான தொகை கிடைக்கும். இது சமுகப் பாதுகாப்பை மேம்படுத்தும் என மத்திய அரசு நம்புகிறது.