எங்கு திரும்பினாலும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள், பெண்கள் சாலையில் நடமாட, சுதந்திரமாக இருக்க, படிக்க தடை விதிக்கப்பட்டு, நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் வறுமையில் வாடும் நிலை என ஆப்கானிஸ்தான் நாட்டை தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது தாலிபான் ஆட்சி.
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய போது எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் அமெரிக்க ராணுவ விமானத்தின் விளிம்பில் தொத்திக்கொண்டு பயணித்து மரணம் அடைந்த காட்சியை யாரும் மறந்திருக்க மாட்டோம். இப்படி இருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக ஆப்கானி-யின் மதிப்பு இந்திய ரூபாயை காட்டிலும் அதிகமாக உள்ளது.

அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் டாலர் இன்டெக்ஸ் குறியீடு 106.24 அளவை எட்டி 6 மாத உயர்வை தொட்டு உள்ளது. இதன் மூலம் இந்திய ரூபாய் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருக்கும் அனைத்து நாணயங்களின் மதிப்பும் கணிசமாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.23 ரூபாய் அளவில் சரிந்திருக்கும் வேளையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ஆப்கான் நாட்டின் ஆப்கானி நாணயத்தின் மதிப்பு 78.51 ரூபாயாக உள்ளது.
ஆப்கான் நாட்டின் ஆப்கானி நாணயம் டாலருக்கு எதிரான மதிப்பில் மட்டும் அல்லாமல் ரூபாய் மதிப்புக்கு எதிராகவும் சரிந்துள்ளது. அதாவது ஒரு ஆப்கானி நாணயத்தின் மதிப்பு 1.06 ரூபாய், அப்படியானால் இந்தியா கூடுதல் பணத்தை கொடுத்து ஆப்கானி நாணயத்தை வாங்கும் நிலையில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பில்லியன் கணக்கான டாலர்கள் மனிதாபிமான உதவி வாயிலாக கிடைத்துள்ளது, மேலும் அண்டை நாடுகளுடன் அதிகரித்து வரும் வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் இந்த காலாண்டில் ஆப்கானிஸ்தானின் நாணயத்தின் மதிப்பு உயர்ந்தது மட்டும் அல்லாமல் உலகளாவிய நாணய வளர்ச்சி தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது ஆப்கானி நாணயம்.
தாலிபான் அமைப்பு 2 வருடத்திற்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதில் இருந்து அதன் ஆப்கானி நாணயத்தை மேம்படுத்துவதிலும், டாலர் மற்றும் பாகிஸ்தான் ரூபாயை பயன்படுத்துவதிலும் அதிகப்படியான கட்டுப்பாடுகளையும், தடைகளை விதித்துள்ளது.
இதேவேளையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் டாலர் நாணய இருப்பை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆன்லைன் டிரேடிங் தடை செய்யப்பட்டு இருக்கும் வேளையில் இதை மீறுபவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள் என்ற உத்தரவையும் வெளியிட்டு உள்ளது.
இதன் மூலம் ஒருபக்கம் ஆப்கான் நாட்டு நாணயத்தின் கட்டுப்பாடான பணப்புழக்கம், மனிதாபிமான உதவி மற்றும் அண்டை நாடுகள் உடனான வர்த்தகம் தொடர்ந்து உயர்ந்தது, இதோடு பிற வெளிநாட்டு நாணய வரவு ஆகியவற்றின் வாயிலாக ஆப்கானிஸ்தான் நாணயத்தின் மதிப்பு இந்த காலாண்டில் மட்டும் சுமார் 9 சதவீதமும், நடப்பு ஆண்டில் 14 சதவீதமும் உயர்ந்துள்ளது. இந்த தடாலடி வளர்ச்சியில் கொலம்பியா மற்றும் இலங்கை நாணயங்களை ஓரம் கட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications