கர்நாடகா மாநிலத்தின் புகழ்பெற்ற சோப்பு தயாரிப்பு நிறுவனம் தான் மைசூர் சாண்டல். இந்தியா முழுவதும் பிரபலமாக பலராலும் பயன்படுத்தக்கூடிய சோப்பு என்ற பெருமை மைசூர் சாண்டலுக்கு உண்டு.
கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜெண்ட்ஸ் நிறுவனம் தான் மைசூர் சாண்டல் சோப்புகளை தயாரித்து விற்பனை செய்கிறது. 100 ஆண்டுகளுக்கு மேலான இந்த மைசூர் சாண்டல் சோப்புகள் அதன் தரத்திற்கும் வாசனைக்கும் அது தரக்கூடிய புத்துணர்ச்சிக்கும் பெயர் போனது. மைசூர் சாண்டல் சோப்புக்கான விளம்பர தூதராக கர்நாடக மாநில அரசு தமன்னாவை நியமனம் செய்திருக்கிறது.

கிட்டத்தட்ட 108 ஆண்டுகள் பழமையான இந்த சோப்பின் புதிய விளம்பர தூதராக தமன்னாவை நியமனம் செய்து நேற்றைய தினம் அதற்கான அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சோப்பிற்கான விளம்பர தூதராக நடிப்பதற்கு தமன்னாவுக்கு 6.2 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டிருக்கிறது. பெங்களூருவில் இது தொடர்பாக நடைபெற்ற அறிமுக விழாவில் கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி. பாட்டில் , நடிகை தமன்னா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி. பாட்டில் 2030-ம் ஆண்டுக்குள் மைசூர் சாண்டல் சோப்பின் விற்பனையை 5000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய தமன்னா மைசூர் சாண்டல் சோப் நமது பாரம்பரியம் , பெருமை என குறிப்பிட்டார். இதில் விளம்பர தூதராக இருப்பது எனக்கு மிகப்பெரிய பெருமை என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மைசூர் சாண்டல் சார்பாக ஃபேஸ் வாஷ் போன்ற பல்வேறு தயாரிப்புகளையும் அறிமுகம் செய்து வைத்தனர். இதற்கிடையே மைசூர் சாண்டல் நிறுவனத்தின் விளம்பர தூதராக தமன்னாவை நியமனம் செய்திருப்பது அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேராத தமன்னாவை மைசூர் சாண்டலுக்கான விளம்பர தூதராக நியமித்ததற்கு , பாஜக , மஜத ஆகிய எதிர்க்கட்சிகளும் கன்னடா அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராஷ்மிகா, ருக்மணி வசந்த் போன்றோர் இருக்கும் போது கர்நாடகாவை சேராத தமன்னாவை விளம்பர தூதராக நியமனம் செய்தது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர். கர்நாடகாவில் நீண்ட ஆண்டுகளாகவே இந்த சர்ச்சை இருக்கிறது. கர்நாடக மாநில நடிகைகளை மைசூர் சாண்டலின் விளம்பர தூதராக நியமிக்காமல் மற்ற நடிகைகளை நியமனம் செய்வதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


Click it and Unblock the Notifications