தமிழ்நாடு இந்தியாவில் வேகமாக பொருளாதார வளர்ச்சியை அடைந்து வரும் மாநிலமாக இருக்கிறது. வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி என உற்பத்தி மையமாகவும் தொழில் ரீதியாகவும் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தமிழ்நாடு எட்டி வருகிறது.
அந்த வகையில் கோடிக்கணக்கான தமிழர்களின் அயராத உழைப்புக்கு சிறந்த பலன் கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. மத்திய புள்ளியல் துறை வெளியிட்டுள்ள தகவலின் படி தமிழ்நாடு 2024 - 25ஆம் நிதி ஆண்டில் 11.29% பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்தது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதாவது 2025 - 26 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.83 சதவீதம் என இரட்டை இலக்கத்திலேயே நீடிக்கிறது.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேசிய சராசரி வளர்ச்சி விகிதமான 2011- 2012 ஆம் ஆண்டில் 7.4 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2021 -22 முதல் 2025 - 26 வரை தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆண்டுதோறும் சராசரியாக 9.07 சதவீதம் என்ற விகிதத்தை எட்டி இருக்கிறது.அதற்கு முந்தைய ஐந்தாண்டு அதாவது 2016 - 17 முதல் 2020 - 21 வரை தமிழ்நாட்டின் சராசரி வளர்ச்சி விகிதம் 5.21%.
கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 3.86 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்கிறது. தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 35.29 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இது முந்தைய நிதியாண்டில் 31.19 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. மத்திய புள்ளியியல் துறை வெளியிடக்கூடிய தகவலின் படி தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் 4.08 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு இதில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட ஒரு மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து தன்னை தக்க வைத்து வருகிறது. தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியில் சேவைத்துறை , முதன்மை துறை மற்றும் தொழில்துறை , வேளாண்மை துறை ஆகியவை சிறப்பான பங்களிப்பை தந்துள்ளன.
இது குறித்து மகிழ்ச்சியுடன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் , " தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை! என கூறியுள்ளார். திராவிட மாடல் தனித்துவமான மாடல்! சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்! முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம் என தெரிவித்துள்லார்.
சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்!" என்பது தான் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications

