தென்னிந்தியாவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டிற்கும் ஆந்திராவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தமிழ்நாட்டு முதலீடுகள் ஆந்திராவுக்கு செல்வதாக கடந்த சில மாதங்களாகவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அதிர்ச்சியான ஒரு தகவல் வெளியாகி பூதாகரமாகியுள்ளது.
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செயல்படும் முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி தமிழ்நாடு (Guidance Tamil Nadu) மற்றும் ஆந்திர பிரதேசத்தின் மாநிலப் பொருளாதார மேம்பாட்டு வாரியம் (APEDB / State Economic Development Board) ஆகியவற்றுக்கு இடையிலான இந்த போட்டியில், தகவல் கசிவு என்ற புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது கைடன்ஸ் தமிழ்நாட்டின் முன்னாள் ஊழியர்களை ஆந்திரா அரசு அழைத்து பணியில் அமர்த்தியதாகவும் அவர்கள் மூலம் சில தகவல்களை பெற்று முதலீடுகளை ஈர்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன, எக்கனாமிக் டைம்ஸ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசிய தகவல்கள் ஆந்திர பிரதேசத்திற்கு கசிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கைடன்ஸ் தமிழ்நாட்டில் பணியாற்றி வந்த 15 பேரை தவெக அரசு பணிநீக்கம் செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறியுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர்கள். இப்படி கைடன்ஸ் தமிழ்நாட்டிலிருந்து நீக்கப்பட்டவர்களில் சிலர் ஆந்திர பிரதேசத்தின் மாநில பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் நீண்டகாலமாக அந்த அமைப்பில் பணியாற்றி வந்த இந்த அதிகாரிகள் ஆந்திராவிற்கு ரகசிய தகவல்களை வழங்கினார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக அரசுக்கும், தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுக்கும் இடையே பரிமாறப்பட்ட ரகசிய தகவல்கள் கசிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டாலும், எந்தெந்த தகவல்கள் கசிந்தன மற்றும் அதற்கான உறுதியான ஆதாரங்கள் என்னென்ன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடப்படவில்லை.
தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவிற்கு செல்வதாகக் கூறப்படும் கருத்தை தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வந்தாலும், இந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தான் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் வழங்கும் மூன்று தென் கொரிய நிறுவனங்ள் ஹவாஷின் , செயோன் மற்றும் ஐவாமெட் ஆகியவை ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் புதிய ஆலைகள் அமைக்க மொத்தம் 1,614 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இவை தமிழ்நாட்டுக்கு வர வேண்டியவை என்றும் ஆனால் ஆந்திராவுக்கு சென்றுவிட்டன என்றும் அப்போது குற்றச்சாட்டு எழுந்தது, ஆனால் தவெக அரசு அதனை மறுத்தது.
இதற்கிடையே ரகசிய தகவல்களால் தங்களுக்கு பலன் கிடைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஆந்திர பிரதேச அரசு மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் மறுத்துள்ளன. உள்கட்டமைப்பு, கொள்கைகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த நிர்வாகமே முதலீடுகளை ஈர்க்கின்றன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications

