தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி ஒரு மாத காலமாகிவிட்டது. ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் அதனை தொடர்ந்து மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடந்தது. தேர்தலில் திமுக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. விஜய்-இன் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
காங்கிரஸ், இடதுசாரிகள் , விசிகவின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். பின்னர் சட்டசபை கூடி சபாநாயகர் தேர்வு, பெரும்பான்மை நிரூபணம் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. இதன் பின்னர் சட்டமன்ற தொடர் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூன் 18-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று வெளியிட்டார். முதல் நாள் கூட்டத்தில், தமிழக ஆளுநர் அர்லேகர் உரையாற்ற இருக்கிறார். ஆங்கிலத்தில் இடம்பெறும் அவரது உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, ஆளுநரின் உரையை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசிப்பார்.
அடுத்த 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இதில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுவார்கள். இதனை அடுத்த் 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட்டில், தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை நிகழ்வுகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பும் என சொல்லப்படுகிறது.2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கரம் நீட்டிய காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட 35 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்னா். எதிர்க்கட்சிகளாக திமுக, அதிமுக ஆகியவை சட்டப்பேரவையில் பல கேள்விகளை எழுப்ப தயாராகி வருகின்றன.
இந்தாண்டு தொடக்கத்தில் திமுக ஆட்சியில் 2026 -27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தவெக அரசில் நிகழாண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இது தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் முழு நீள பட்ஜெட்டாக இருக்கும். பெண்களுக்கு 2500 ரூபாய் உதவி தொகை, திருமணத்தின் போது தங்கம் சீர் வழங்கும் திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications

