சென்னை: பரபரப்பான பலத்த சலசலப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழ் நாடு பட்ஜெட்டினை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் தாக்கலில் உயர்கல்வியும் திறன் மேம்பாடும் என்ற தலைப்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மனிதவளமே மாநிலத்தின் மாபெரும் செல்வம் என்பதை உணர்ந்துள்ள அரசு, அதனை மேம்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள திறன் மிக்க பணியாளர்களே பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஒரு முக்கிய காரணி என்பதை அறிந்துள்ளோம். ஆக மிக வேகமாக மாறி வரும் தொழில் சூழலுக்கு ஏற்ப மனித வளத்தை அதிகரிப்பதும் நமது கடமை.
சிறந்த திறன் மையங்கள்
இதற்காக 2877 கோடி ரூபாய் செலவில் 71 அரசு தொழில்பயிற்சி நிலையங்களை தலை சிறந்த திறன் மையங்களாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருவதாகவும், வரும் கல்வி ஆண்டிலேயே இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலை தான் குறிக்கோள்
இதோடு நில்லாமல் இதற்கு அடுத்த கட்டமான தொழில்துறையினருடன் இணைந்து தொழில்துறை 4.0 தரத்திற்கு ஏற்ப அரசு பலதொழில் நுட்ப கல்லூரிகளை திறன் மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தினை வரும் ஆண்டில் அரசு தொடங்கும். இக்கல்வி நிறுவனங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழில்சார் பாடங்களை உருவாக்குவது, ஆசியர்களின் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என பலவும் இந்த திட்டத்தின் குறிக்கோள். இதற்காக 54 அரசு பல்தொழில் நுட்ப கல்லூரிகளில் 2783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன் மிகு மையங்களாக தரம் உயர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
திறன் பயிற்சி மையம்
தொழிற் பயிற்சி நிறுவனங்களிலும், பல்தொழில் நுட்பக் கல்லூரிகளிலும் பணிபரியும் ஆசிரியர்களுக்கு, உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியினை வழங்குதல், திறமையான பணியாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன், 120 கோடி ரூபாய் செலவில், சென்னை அம்பத்தூரில் தமிழ் நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
என்னென்ன பயிற்சிகள்
இந்த திறன் பயிற்சி மையத்தில் இயந்திர மின்னணுவியல் (mechatronics), இணைய வழி செயல்பாடு (internet of things), அதி நவீன வாகன தொழில் நுட்பம் (advanced automobile),துல்லிய பொறியியல் ( precision engineering) மற்றும் உயர்தர வெல்டிங் (advanced welding) போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டம்
கடந்த ஆண்டே 10 லட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த திறன்களில் பயிற்சி அளித்து, நல்ல வேலை வாய்ப்பினை பெற நான் முதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் முன்னணி தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டுகின்றது. இது வேலை வாய்ப்பினை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதனை மெருகேற்றும் விதமாக இந்த ஆண்டும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தொழில் பயிற்சி கூடங்கள்
திறன் பயிற்சி கட்டமைப்பு பெருமளவில் அதிகரிக்க, தற்போதுள்ள தொழிற்சாலைகள் தொழில் பயிற்சி கூடங்களாக பயன்படுத்தப்படும். இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் என்ற இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டில் 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications