பிப்ரவரி 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டை சேர்ந்த 1 கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்கு தனவரவு கொடுக்கும் நாளாக மாறி இருக்கிறது. வழக்கமாக 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பெண்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 5000 ரூபாய் வந்திருக்கிறது.
தேர்தலை காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். எனவே நாம் முந்தி கொண்டோம். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாத இறுதியிலேயே கூட தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால் மகளிர் உரிமை தொகை போன்ற திட்டங்களை நிறுத்த கோரி எதிர்க்கட்சிகள் நீதிமன்றங்களை நாட நேரிடலாம்.
ஒரு வேளை தமிழ்நாடு அரசு முன் கூட்டியே இப்படி பணத்தை வரவு வைக்கப்போகிறோம் என அறிவித்திருந்தால் கூட பணம் போடுவதற்குள் எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் சென்று தடை கோர நேரிடலாம். எனவே தான் அரசு பணத்தை வரவு வைத்துவிட்டு பின்னர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

மகளிர் உரிமை தொகை திட்டம் மகளிர் வாக்குகளை பெருமளவில் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. அந்த வகையில் இந்த 5000 ரூபாய் பணம் வாக்குகளையும் கொண்டு வரும் என்பதே உண்மை. ஏனெனில் ஏற்கனவே அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகளிர் உரிமை தொகையை 2000 ரூபாயாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் ஸ்டாலின் அரசு முன் கூட்டியே 5000 ரூபாய் வரவு வைத்ததோடு ஆட்சி அமைத்தால் 1000 ரூபாய் தொகையை 2000 ரூபாய் என உயர்த்தி வழங்குவோம் என்றும் தேர்தல் வாக்குறுதி தந்துள்ளது. அந்த வகையில் தேர்தலுக்கான சிக்ஸர் அறிவிப்பாக தான் இது அமைந்துள்ளது.
தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தொகையை வழங்க முடியாது, அதே போல மே மாதத்தில் ஆட்சியே முடிகிறது என்பதால் அந்த மாதத்திலும் மகளிர் உரிமை தொகை வழங்க முடியாது. எனவே தான் மார்ச், ஏப்ரல் தொகையை முன் கூட்டியேயும், மே , ஜூன் மாத தொகைகளை கோடைகால சிறப்பு தொகை என்ற பெயரிலும் ஸ்டாலின் அரசு வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications