சமீபகாலமாக தமிழ்நாடு தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அதிகரித்து வரும் டெக் நிறுவனங்கள் என்று சொல்லலாம். இதனிடையே நேற்று சென்னை அருகே உள்ள பட்டாபிராமில் புதிய 21 மாடி டைடல் பார்க்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் இந்த புதிய டைடல் பார்க்கில் பல்வேறு உயர்மட்ட நிறுவனங்கள் செயல்படவுள்ளது.
திறப்பு விழாவின்போது மு.க.ஸ்டாலின் வெப்பெராக்ஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் M/s. டோட்ரிக்ஸ் டெக்னாலஜிஸ் LLP போன்ற நிறுவனங்களுக்கு ஸ்பேஸ் அலாட்மென்ட் ஆர்டர்களை வழங்கினார். அமைச்சர்கள் டி.எம். அன்பரசன், எஸ்.எம். நாசர், மற்றும் டி.ஆர்.பி. ராஜா; சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜே. கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், எஸ்.சந்திரன், வி.ஜி. ராஜேந்திரன், ஏ. கிருஷ்ணசாமி, கே.கணபதி, ஜோசப் சாமுவேல், மற்றும் எஸ்.சுதர்சனம் போன்ற உயர் அதிகாரிகள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

2000-ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வரும் தலைவருமான மு.கருணாநிதி சென்னையில் முதன் முதலாக டைடல் பார்க்கை திறந்து வைத்து தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதாக ஸ்டாலின் அவர்கள் தனது சமூக ஊடக தளத்தில் நினைவு கூர்ந்திருந்தார். இந்த டைடல் பார்க் தமிழகம் முழுவதும் ஐடி துறை வளர்ச்சியடைய பெரிதும் உதவியது. தொடர்ந்து பல்வேறு டைடல் பார்க்குகள் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் அமைக்கப்பட்டன. விழுப்புரம், சேலம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களிலும் மினி டைடல் பார்க்குகள் செயல்பட்டு வருகின்றன.
சுமார் 6000 தொழில்நுட்ப வல்லுநர்கள் பணி புரியும் வகையில் இந்தப் பார்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 21 தளங்கள் உள்ளன. 330 கோடி முதலீட்டில் 5.57 லட்சம் சதுர அடியில் அதிநவீன வசதிகளுடன் பட்டாபிராம் டைடல் பார்க் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலகம் முழுவதும் மிகுந்த பாதுகாப்பு வசதிகள், உடற்பயிற்சி கூடங்கள், விசாலமான அரங்கம், அதோடு தோராயமாக 1000 கார்கள் நிறுத்துவதற்கான இடம் மற்றும் 2000-த்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய டைடல் பார்க் மூலம் திருவள்ளூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்டா பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூரில் மினி டைடல் பார்க் திறக்கப்பட்டது. இதில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகிறது. இதற்கு முன்னர் சென்னை, பெங்களூரு என வேலை வாய்ப்புக்காக சொந்த ஊரை விட்டு சென்ற டெல்டா பகுதியைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு தஞ்சாவூர் டைடல் பார்க் பெரிதும் உதவியுள்ளது.


Click it and Unblock the Notifications