பெண்களை வேலைவாய்ப்பு சந்தையில் உட்படுத்த வேண்டும் என்ற முக்கிய இலக்கை அடைய தமிழ்நாடு அரசு பல முக்கிய திட்டங்களையும், சேவைகளையும் அறிவித்து வருகிறது. பெண்களுக்கான நிதி சுதந்திரம் கிடைக்கும் போது ஒரு வீட்டின் பொருளாதாரம், வாழ்க்கை தரம் உயரும், இது ஒரு தெருவில் துவங்கி மாநிலம் முழுவதும் நடக்கும் போது தமிழ்நாட்டின் ஜிடிபி பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.
இதன் நீட்சியாக தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்களைத் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் இந்தத் திட்டத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு முதலீடுகளை ஈர்ப்பதிலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தீவிர கவனம் செலுத்தும் இதேவேளையில் பெண்களை முழு நேர வேலைவாய்ப்பில் பங்கேற்க வைக்க வேண்டும் என்பதில் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி வருகிறது. இதன் வாயிலாகவே வீட்டில் குழந்தையுடன் இருக்கும் பெண்களுக்கு வேலைக்கு செல்லும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் காப்பகங்களை சிப்காட் தொழிற்பூங்காவில் துவங்க வேண்டும் என்ற திட்டம் தீட்டப்பட்டது.
இந்தியாவிலேலே அதிக எண்ணிக்கையிலான செயல்படும் தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. மேலும், நாட்டின் மொத்த பெண் ஊழியர்களில் 43 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு இப்புதிய திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.
பெண் ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், சிப்காட் குழந்தைகள் காப்பகங்களை அமைத்து வருகிறது என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் நேற்று பல்வேறு இடங்களில் குழந்தைகள் காப்பகங்களைத் திறந்து வைத்தார். இந்த சேவை தற்போது தேர்வாய் கண்டிகை, வல்லம் வடகால், சிறுசேரி, கும்மிடிப்பூண்டி, கடலூர், பர்கூர், பெருந்துறை, தூத்துக்குடி, நிலக்கோட்டை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, ஒரகடம், பிள்ளைப்பாக்கம், ஓசூர் மற்றும் கங்கைகொண்டான் ஆகிய சிப்காட் தொழிற்பேட்டைகளில் இந்தக் குழந்தைகள் காப்பகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த முக்கிய நிகழ்வுடன் முதலமைச்சர் ஸ்டாலின் உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்காக மெகா உணவுப் பூங்காக்களையும் திறந்து வைத்தார். திண்டிவனம் அருகே 157 ஏக்கர் பரப்பளவில் ரூ.120 கோடி மதிப்பிலும், தேனி மாவட்டத்தில் 123 ஏக்கர் பரப்பளவில் ரூ.70 கோடி மதிப்பிலும் இந்தப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்துடன், அரசு சட்டக் கல்லூரிகளில் புதிதாகக் கட்டப்பட்ட கல்வி மற்றும் நிர்வாகக் கட்டிடங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


Click it and Unblock the Notifications