தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய சூழலில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொதுமக்களின் வங்கி கணக்கில் நேரடியாகவே சிறப்பு நிதிகளை வரவு வைத்து இன்ப அதிர்ச்சி தந்து வருகிறது.
கடந்த மாதம் தான் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக 5000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இது 1 கோடியே 30 லட்சம் மகளிர் உரிமை தொகை பயனாளிகளுக்கு மிகப்பெரிய ஒரு சர்ப்ரைஸ் ஆக அமைந்தது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் மற்றும் கோடைகால சிறப்பு நிதியாக 2000 ரூபாய் என மொத்தம் 5000 ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைத்தது.

திடீரென தங்களுடைய வங்கி கணக்கில் அரசு சார்பாக 5000 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டதை ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்த சூழலில் இன்றைய தினம் தமிழ்நாடு அரசு மேலும் ஒரு சர்ப்ரைஸ் தந்திருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பெண்களுக்கு கோடைகால சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது போலவே அரசின் மாத ஓய்வூதிய தொகை பெற்று வரக்கூடிய முதியோர், கைம் பெண்கள் , வயது முதிர்ந்த திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியை வரவு வைத்திருக்கிறது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் விளிம்பு நிலையில் இருப்பவருக்கும் சிறப்பு நிதி என கூறியிருக்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன என கூறியுள்ளார்.
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம், நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார். இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது என கூறியுள்ளார்.
இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம் , வெல்வோம்_ஒன்றாக என முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அரசின் உதவி தொகை பெற்று வரக்கூடிய கைம்பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் உடனடியாக தங்களுடைய போனில் மெசேஜை செக் செய்து கொள்ளுங்கள். உங்களின் வங்கி கணக்கில் அரசின் சிறப்பு நிதியும் மாதாந்திர உதவி தொகையும் சேர்த்து வரவு வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications