தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நாளைய தினம் ( மே 27ஆம் தேதி ) டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே நான்காம் தேதி எண்ணப்பட்டது. தேர்தலில் 108 இடங்களில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியது. இதனை அடுத்து காங்கிரஸ் , இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்தது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். தமிழ்நாடு அரசியல் களம் தற்போது மிகவும் பரபரப்பானதாக மாறி இருக்கிறது. தவெகவிற்கு ஆதரவாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டு நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் அதிமுகவிலிருந்து விலகி தங்களுடைய எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து இருக்கிறார்கள். ஒருபுறம் தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்ட தொடங்கி இருக்கின்றன.

தமிழக அரசியல் நிலவரம் கலவரமாக மாறி இருக்கக்கூடிய இந்த சூழலில் அரசு முறை பயணமாக முதலமைச்சர் விஜய் நாளைய தினம் டெல்லி செல்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை சந்திக்கும் அவர் தமிழ்நாடு நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பார் இது தொடர்பான மனுவையும் அவர் பிரதமர் மோடியிடம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இதனை அடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் என பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களையும் விஜய் சந்திப்பார் என சொல்லப்படுகிறது. இது தவிர கூட்டணி கட்சி தலைவரான ராகுல் காந்தியையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்கிறார். இதனால் இந்த நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
வழக்கமாகவே ஒரு மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் டெல்லி செல்வார். குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திப்பது ஒரு மரபாகவே பின்பற்றப்படுகிறது. நிதி மற்றும் நிர்வாக ரீதியாக மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை மற்றும் நலத்திட்டங்களுக்கு நிதிகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த பயணங்களின் போது முன் வைக்கப்படும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், நிலுவையில் உள்ள நிதி விடுவிப்பு, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து விஜய் , பிரதமரிடம் கோரிக்கை கடிதத்தை வழங்க இருக்கிறார். முதல் முதலமைச்சர் விஜய் தன்னுடைய டெல்லி பயணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் அங்கே நடக்கின்றன. 3 நாட்களுக்கு அவர் டெல்லியில் தங்கி இருப்பார். ஏற்கனவே தமிழ்நாடு அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ வழக்கு விசாரணை நடக்கிறது என பல நிகழ்வுகளுக்கு மத்தியில் விஜய்யின் டெல்லி பயணம் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications

