நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புது துணி, பட்டாசு, இனிப்பு, பலகாரம் என மக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக ரேஷன் கடைகள் மூலம் இலவச வேட்டி , சேலை விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது யாருக்கு கிடைக்கும்? எந்த தேதி வரை இலவச வேட்டி , சேலை வாங்க முடியும் என்ற விவரங்களை பார்க்கலாம்.
பொதுவாக பொங்கல் பண்டிகையின் போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு சார்பாக இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். ஆனால் தீபாவளி பண்டிகையில் முதியோர் ஓய்வூதியம் பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் முதியோர் உதவித்தொகை பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ரேஷன் கடையில் இலவச, வேட்டி சேலை வழங்கப்படும் என தமிழக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று முதலே இலவச வேட்டி, சேலை விநியோகம் தொடங்கிவிட்டது. வரும் சனிக்கிழமை அதாவது நவம்பர் 7ஆம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச வேட்டி, சேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.
எனவே oap pension எனப்படும் முதியோர் ஓய்வூதியம் பெறும் ரேஷன் அட்டைதாரர்கள், வரும் 7ஆம் தேதிக்கு தங்கள் ஊரில் உள்ள ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலைகளை பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் அட்டையை கொண்டு சென்றால் கைவிரல் ரேகையை சரிபார்த்து வேட்டி, சேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதியம் வாங்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ள கூட்டுறவு துறை அதிகாரிகள் ,கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க, முன்கூட்டியே சென்று வேட்டி, சேலைகளை வாங்கி கொள்ளும்படி அறிவுறுத்துகின்றனர்.
முன்னதாக தீபாவளிக்காக அரசு சார்பில் இலவச மளிகை தொகுப்பு வழங்கப்படும் என தகவல்கள் பரவின. ஆனால் அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பின் ரேஷன் கடைகளில் முதல்முறையாக இலவச வேட்டி, சேலை வழங்கப்படுவதால் அதன் தரம் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications

