2026-ஆம் ஆண்டின் மே 4-ஆம் தேதியான இன்று தமிழக அரசியலில் மிக முக்கியமான நாள். ஏனெனில் 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் யார் வெற்றி வேட்பாளர் என்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் ஒவ்வொன்றாக வரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகளாக செயல்படும் எம்எல்ஏ-க்கள், எம்பி-கள் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்ற விவரங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

2026 தேர்தல் முடிவுகள்: மிகவும் பரபரப்பாக 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரையில் வெளிவந்துள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி மிகப் பெரிய அரசியல் மாற்றம் தென்படுவதாகத் தெரிகிறது.
இந்த கட்டுரை எழுதும் வரையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறார் என்ற தகவல் தெரிகிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக-விற்கும், தவேகா-விற்கும் கடும் போட்டி நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியும் சில தொகுதிகளில் வலுவான வாக்கு எண்ணிக்கையைப் பெற்றுள்ளது.
MLA சம்பளம்: தமிழகத்தில் உள்ள எம்எல்ஏ-க்களுக்கு தற்போது ரூ.1,05,000 சம்பளம் வழங்கப்படுகிறது. அதோடு இதர சலுகைகளும் சேர்த்து வழங்கப்படுகிறது. 2017-ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஏற்கனவே எம்எல்ஏ-க்களுக்கு வழங்கப்பட்ட சம்பளமான 55,000 ரூபாயை கிட்டத்தட்ட 90 சதவீதம் வரை உயர்த்தி ரூ.1,05,000 மாற்றியது.
ஒவ்வொரு MLA-வுக்கும் இலவச மருத்துவ வசதி, பயணம் செய்வதற்கு இலவச பிளைட் மற்றும் ட்ரெயின் டிக்கெட் போன்றவற்றையும் அரசு வழங்குகிறது. அதே போல MLA-க்கள் தாங்கள் நினைத்தால் தங்களுக்கென ஒரு அலுவலகத்தை நிர்வகிக்கலாம். அதில் தேவைப்பட்டால் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து பணியமர்த்தலாம். அதற்கான சம்பளத்தையும் அரசே ஏற்கும்.
அரசு அதிகாரிகளுக்கு எப்படி பென்ஷன் கிடைக்கிறதோ? அதேபோல ஒவ்வொரு MLA-வுக்கும் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை பென்ஷன் வழங்கப்படும். 5 வருடம் MLA-வாக இருந்த பிறகு மறுமுறை மீண்டும் தேர்தலில் MLA-வாக அவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் தொடர்ந்து ஆயுள் முழுக்க பென்ஷன் வழங்கப்படும். அதுவே ஒரு எம்எல்ஏ ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்தலில் வெற்றி பெற்று 2 முறை அல்லது 3 முறை MLA-வாக இருந்தால் பென்ஷன் தொகை சற்று கூடுதலாக இருக்கும். அதே நபர் துறை சார்ந்த அமைச்சராக பொறுப்பேற்றால் அதற்கு ரூ. 1,50,000 முதல் ரூ.2 லட்சம் வரையிலான சம்பளம் கிடைக்கும். அதோடு பிற சலுகைகளும் சேர்த்து கிடைக்கும்.
முதலமைச்சருக்கான சம்பளம்: தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கும் தலைவர்களுக்கு சம்பளத்துடன் சேர்த்து இதர சலுகைகளும் வழங்கப்படும். தமிழக முதலமைச்சர் மாத ஊதியமாக 2,05,000 ரூபாயைப் பெறுவார். இதைத் தவிர அரசு பங்களா, பாதுகாப்பாக சென்று வர வாகனங்கள் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் அரசின் செலவிலேயே முதலமைச்சருக்கு கூடுதலாக வழங்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம்: மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அரசால் ஊதியம் வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் சம்பளம் 2,50,000 வரையில் இருக்கும். இதைத் தவிர பிற சலுகைகளும் சேர்த்து கிடைக்கும்.


Click it and Unblock the Notifications