தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது. விஜய் அரசு அமைந்தது முதலே முந்தைய திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை வெளிப்படுத்துவோம் என கூறி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை அடுத்து விரைவில் மின்சார துறை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார், மின்வாரிய வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டார். இதன்படி தமிழ்நாட்டின் மின்வாரியத்திற்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் தமிழக மின்துறையின் நிதி நிலைமை எப்படி உள்ளது, மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் வாரியத்தின் உள்கட்டமைப்பு, மனிதவளம், தளவாடப் பொருள்கள், வருவாய், செலவினம் உள்ளிட்ட விவரங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கான மின்வாரியத்தின் வரவு செலவு நிலவரத்தை கீழே காணலாம்:
2001 - 06ஆம் ஆண்டு வரை:
வருவாய் ரூ.59,084 கோடி
செலவு ரூ.67,439 கோடி
பற்றாக்குறை ரூ.8,335 கோடி
2006 - 2011 ம் ஆண்டு நிலவரப்படி:
வருவாய் ரூ.92,737 கோடி
செலவு - ரூ.1,28,200 கோடி
பற்றாக்குறை ரூ.35,463 கோடி
2011 - 2016ஆம் ஆண்டு நிலவரப்படி:
வருவாய் 1,92,972 கோடி
செலவு 2,49,332 கோடி
பற்றாக்குறை ரூ.56,361 கோடி
2016-2021ஆம் ஆண்டு நிலவரப்படி:
வருவாய் - ரூ.3,20,140 கோடி
செலவு - ரூ.3,78,674 கோடி
பற்றாக்குறை - ரூ.58,534 கோடி
2021 - 2026ஆம் ஆண்டு நிலவரப்படி:
வருவாய் - ரூ.4,07,000 கோடி
செலவு - ரூ.5,02,443 கோடி
பற்றாக்குறை - ரூ.34,447 கோடி
மின்சார கட்டணம் உயர்த்தப்படும் போது அதே அளவுக்கு செலவினங்களும் உயர்த்தப்படுகிறது. செலவினங்கள் அதிகரிக்கிறது தவிர கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவில்லை, புதிய பணியாளர் தேர்வு மேற்கொள்ளப்படவில்லை என கூறிய அமைச்சர் நிர்மல் குமார், மின் வாரியத்தில் குறுகிய கால கான்ட்ராக்ட் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. அதை நீண்ட கால கான்ட்ராக்டாக மாற்றுவதன் மூலம் விலையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மாதம் 215 கோடி ரூபாய் சேமிக்கப்படும் என கூறினார்.
மேலும் மின்சார துறையில் மொத்த பணியிடங்கள் 1,40,635, அதில் 74,714 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன, மொத்தம் 65,921 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன என கூறிய அவர் ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தாலும், மக்களுக்கு சிக்கல் இல்லாமல் சேவை செய்கிறோம் எ. 2021 - 2026 வரை திமுக ஆட்சிகாலத்தில் 343 பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளன என கூறிய அவர் இந்தாண்டிற்குள் 20,000 பேர் புதிதாக வேலைக்கு சேர்க்கப்படுவார்கள் என்றார்.
2021-26இல் நியமிக்கப்பட்ட 5,000 கேங் மேன்களும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற வாக்குறுதியை தந்தார். மேலும் மின்வாரிய கடன் அதிகமாக இருப்பதால் மின் கட்டணம் உயர்த்தும் திட்டம் இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு இந்த ஆண்டு மின்சார கட்டணம் உயர்வு இருக்காது என அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

