தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக தவெக அரசு நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக பெண் வாக்காளர்களை கவரும் வகையில் வெளியிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு கவனம் செலுத்தி வருகிறது.
அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம், ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், தாய்மாமன் சீர் திட்டம், அண்ணண் சீர் திட்டம், மாதம் தோறும் மகளிரூக்கு 2,500 ரூபாய் நிதியுதவி ஆகியவை தவெக வெளியிட்ட முக்கிய வாக்குறுதிகள் ஆகும். இதில் ஏற்கனவே தாய்மாமன் சீர் திட்டம், அண்ணண் சீர் திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் பெண்களுக்கு குட் நியூஸாக இரண்டு முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார். இதன்படி ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் கிடைக்கும் வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தார். அடுத்ததாக இலவச பேருந்து பயணம் திட்டம் குறித்தும் அவர் அறிவித்தார்.
இதன்படி வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டத்தை விரிவுபடுத்தும் வகையிலான வெற்றி பயண திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், இலவச மகளிர் பயணத் திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.
சமூக நீதி சிந்தனையுடன் மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை விரிபுடுத்தி, பெருமளவில் பெண்களுக்கு பயனளிக்கும் வகையில், வெற்றி பயணம் திட்டம் தேச தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாளில் அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என கூறினார். தற்போது சாதாரண white board பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். அதே போல ஊரக பகுதிகளில் டவுன் பஸ்களில் மட்டுமே இலவசமாக பயணிக்க முடிகிறது.
ஆனால் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் மாநகரம், நகரங்களில் இயங்கும் சாதாரண அரசு பேருந்துகள் மட்டுமின்றி, மாநகரம் மற்றும் நகர பகுதிகளில் இயங்கும் விரைவு, எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம். இதனால் பெண்கள் வெள்ளை போர்டு பேருந்து வர வேண்டும் என காத்திருக்க வேண்டாம். ஏசி அல்லாத அனைத்து மாநகர பேருந்துகளிலும் பெண்கள் டிக்கெட் எடுக்காமல் பயணிக்க முடியும்.
மேலும் கூடுதலாக மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் அதாவது mofussil பேருந்துகள் மற்றும் மலை பகுதிகளில் சாதரண கட்டண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் என கூறினார். மேலும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தில், வருமான உச்ச வரம்பு அல்லது மேற்கொள்ளும் பயண எண்ணிக்கையிலோ எந்த கட்டுப்பாடுகளும் நிர்ணயிக்கப்படாது என்றார்.
இதன் மூலம் அனைத்து பெண்களும் வருமான வரம்பின்றி, வயது வரம்பின்றி இந்த திட்டத்தின் மூலம் அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசமாக பயணம் மேற்கொள்ள முடியும். ஒரு மாதத்திற்கு இத்தனை முறை தான் பயணிக்க வேண்டும் என்ற எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.இதன் மூலம், மாணவிகள் தொலைதூர கல்வி நிலையங்கள் செல்ல, பணியாற்ற, மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்ல கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க முடியும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தின்கீழ், மாற்று பாலினத்தவர்களான திருநர்களும் பயன்பெறலாம். இந்த திட்டத்தை செயல்படுத்த தோராயமாக ஆண்டுக்கு 6,000 கோடி செலவாகும் என்றார்.


Click it and Unblock the Notifications

