சென்னை: தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் அதானி குழுமத்திற்கு டெண்டர் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் திடீரென அரசு அந்த டெண்டரை ரத்து செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வீடுகளில் டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட்டு மின்வாரிய ஊழியர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாக வீடுகளுக்கு சென்று மீட்டரில் பதிவாகி இருக்கும் மின் பயன்பாட்டை கணக்கெடுத்து மின்சார கட்டணத்தை அறிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்திவிட்டால் ஊழியர்கள் நேரில் சென்று கணக்கெடுக்க வேண்டியதில்லை, அதே போல மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வரும் என சொல்லப்பட்டது.
மத்திய அரசின் மறு சீரமைப்பு மின்விநியோகத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 19,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி மின்சார வாரியம் 3.03 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. நான்கு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டன.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இவை சென்னை ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பொருத்தப்பட இருந்தன.
இதில் ஒப்பந்தம் பெறக்கூடிய நிறுவனம் ஸ்மார்ட் மீட்டரை பொருத்துவது, அவற்றை ஒருங்கிணைப்பது, பராமரிப்பது என அனைத்து பணிகளையும் அடுத்த பத்து ஆண்டு காலத்துக்கு மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு நிறுவனங்களும் கலந்து கொண்டு ஒப்பந்த புள்ளி கோரின.
கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி கோரி இருந்தது. எனவே அதானி நிறுவனத்திற்கே இந்த ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் ஒப்பந்தம் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் மின்வாரியம் நிர்ணயித்த விலையை விட அதானி நிறுவனம் அதிக விலையை கோரியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மின்சார வாரியம் தமிழ்நாடு அரசுக்கு தகவல் தெரிவித்து தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அதானி நிறுவன அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் விலையை குறைப்பதில் உடன்பாடு ஏற்படவில்லை .இந்த நிலையில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான டெண்டரையே ரத்து செய்து மின்வாரியம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
அண்டை மாநிலங்களோடு ஒப்பிடும்போது அதானி நிறுவனம் தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு அதிக விலைப்புள்ளி வழங்கியது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் புதிய டெண்டர் போடப்பட்டு ஆறு மாதங்களுக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதானி குழும தலைவர் கௌதம் அதானியை கடந்த ஜூலை மாதம் ரகசியமாக சந்தித்தார் என விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால் தான் அதானியை சந்திக்கவில்லை என முதலமைச்சர் பதில் அளித்திருந்தார் இந்த சூழலில் தான் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டி இருந்த டெண்டர் கடைசி நிமிடத்தில் ரத்தாகியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications