தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காக பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சிலர் விடுமுறை நாட்களை எண்ணி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே போனஸ் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு அறிவித்திருக்கும் போனஸ் போதுமானதாக இல்லை என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 16-ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸை அறிவித்தது. ஆனால் தமிழக அரசு பாரபட்சமாக போனஸ் வழங்குவதாக அரசு ஊழியர் சங்கம் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, இதுபோல் போனஸ் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவரான சு.தமிழ்ச்செல்வி மற்றும் பொதுச் செயலாளரான சு.ஜெயராஜ் ராஜேஸ்வரன் கூறுகையில், தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3000 ரூபாயும், முழு நேர பணியாளர்களுக்கு 1000 ரூபாய் போனஸ் தொகையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற ஊழியர்கள் ஒரு நிதியாண்டுக்கு 240 நாட்கள் வரை பணிபுரிகின்றனர் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

மத்திய அரசு 2006-ஆம் ஆண்டில் பிறப்பித்த திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர்கள், 2006-ஆம் ஆண்டு முதல், 7,000 ரூபாய் போனசாக பெற்று வருகின்றனர்.இதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 7,000 ரூபாய் போனஸ் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் ரூ.3,000 போனஸ் வழங்குவதை ஏற்க முடியாது. மாநில அரசின் இந்த பாரபட்சமான போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு வழங்குவதை போல பொங்கல் போனஸ் 7000 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறப்பு கால வரை ஊதியத்தில் பணிபுரியும் பி பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போனஸ் மற்றும் ஊதியத்தை பாரபட்சம் இன்றி பொங்கல் போனஸ்-ஆக சேர்த்து 7000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications