தமிழ்நாட்டின் வருவாயை பெருக்க மக்கள் தங்களின் யோசனைகளை தெரிவிக்கலாம் என முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அரசு மே மாதம் பதவியேற்றது. கிட்டதட்ட 3 மாதம் ஆகி இருக்கும் நிலையில் நேற்று முன் தினம் தான் மாநில பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி இல்லை என தொடர்ச்சியாக விஜய் அரசு கூறி வருகிறது. இந்த சூழலில் தான் இந்தியாவின் முன்னாள் திட்ட குழு துணை தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் தமிழக அரசு'வருவாய் பெருக்குதல் குழு' (Revenue Augmentation Committee) என்ற ஒரு குழுவை கடந்த வாரம் அமைத்தது.

மாநிலத்தின் நிதி நிலையை உயர்த்தவும், வருவாயை அதிகரிக்கவும் இந்த குழு ஆய்வு நடத்தி அரசுக்கு ஆலோசனை வழங்கும் என அறிவிக்கப்பட்டது. மான்டெக் சிங் அலுவாலியா தலைமையிலான இந்த குழு கடந்த ஜூலை 31ஆம் தேதி தனது முதல் கூட்டத்தை நடத்தியது. அதனை தொடர்ந்து இந்த குழு சார்பாக ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாநிலத்தின் வருவாயை பெருக்க பொது மக்கள், துறைசார் சங்கங்கள் / கூட்டமைப்புகள், பொது நிதி மேலாண்மையில் இயங்கிவரும் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியோரின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளது.
அதன்படி, மாநிலத்தின் சொந்த வரி மற்றும் வரி அல்லாத வருவாயை மேம்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சியுடன் இணக்கமான வருவாய், வசூல் திறன் மற்றும் வருவாய் தன்னிறைவை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் பரிந்துரைகளையும் யோசனைகளையும் தெரிவிக்கலாம்.
மாநிலத்தின் வருவாயை மேம்படுத்துவது தொடர்புடைய எந்தவொரு கருத்துகளும், பரிந்துரைகளும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, 11 ஆகஸ்ட் 2026 அன்று அல்லது அதற்கு முன்னதாக இக்குழுவை வந்தடையும் வகையில் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை தமிழ், ஆங்கிலம், அல்லது இரு மொழிகளிலும் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் யோசனைகளை அனுப்பும் போது, மின்னஞ்சலின் subject பிரிவில், சரக்குகள் மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் - பத்திரப் பதிவு, மாநில ஆயத் தீர்வை, மோட்டார் வாகன வரி, கனிமங்கள், வரியல்லா வருவாய் அல்லது பொதுவான இனம் என கருத்துக்கள் எந்த வகையை சேர்ந்தது என்பதை குறிப்பிடுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
மான்டேக் சிங் அலுவாலியா ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல், பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர். உலக வங்கியில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மத்திய அரசின் நிதித்துறை பொருளாதார ஆலோசகர், பிரதமரின் சிறப்பு செயலர், வர்த்தக துறை செயலர், பொருளாதார விவகார துறை செயலர், நிதித்துறை செயலர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். திட்டக்குழுவின் துணை தலைவராக இருந்தவர்.
மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான 6 பேர் கொண்ட தமிழகத்தின் வருவாய் பெருக்கக் குழு, வரி மற்றும் வரி சாராத பிரிவில் வளர்ச்சியை கொண்டுவருவது, மாநில வருவாயை நிலையான முறையில் அதிகரிப்பது, நிதி ரீதியான சுயசார்பை மேம்படுத்துவது , புதிய வருவாய் வழிகளை கண்டறிவது போன்ற பணிகளை மேற்கொண்டு 3 மாதங்களுக்குள் தனது அதிகாரப்பூர்வ பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும்.


Click it and Unblock the Notifications

