தமிழகத்தில் சாமானிய மக்களுக்கு உணவு வழங்குவதற்காக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்து மாதம் மாதம் தேவைப்படும் உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்த 1.28 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
நம் நாட்டில் ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது .அரசாங்க சலுகைகளைப் பெறுவதற்கு இது அத்தியாவசியமான ஆவணம். சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் தகுதியுடைய பெண்களுக்கு 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு ஏராளமான புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் 39 மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் உள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 35,083 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மூலம் 2,25,24,784 ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கார்டுகளின் மூலம் 7,03,68,572 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
மானிய உணவுப் பொருட்கள்: இலவச அரிசி, மானிய விலையில் கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவை ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் பெரிதும் பலனடைந்துள்ளனர். அவற்றோடு பொங்கல் பரிசு தொகை, வெள்ள நிவாரணம் போன்ற பல்வேறு உதவிகளையும் ரேஷன் கார்டுகளை வைத்து மக்கள் பெறுகின்றனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் புதிய ரேஷன் கார்டு பெற பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரே நேரத்தில் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்காக அரசுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சில வீடுகளில் அதிகாரிகள் நேரில் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். ஏனெனில் ஒரே குடும்பத்தில் வசிப்பவர்கள் அரசாங்க சலுகைகளை பெறுவதற்காக போலி சான்றிதழ்கள் மற்றும் தகவல்களை பயன்படுத்தி புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து வருகின்றனர். புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 2,89,591 விண்ணப்பங்களில் சுமார் 1,28,373 விண்ணப்பங்கள் போலியான தகவல்களால் வைக்கப்பட்டுள்ளதாக உணவு வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications