மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநிலத்தின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் $1 டிரில்லியனாக உயர்த்த வேண்டும் என்ற முக்கிய இலக்கை கொண்டிருக்கும் வேளையில், இதனை அடைய மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தனியார் துறை முதலீட்டை தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் (TNIDB) திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை, சேவை துறையில் தொடர்ந்து முதலீட்டைப் பெற்று வரும் வேளையில், இத்துறை வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தனியார்-அரசு கூட்டு (Public Private Partnership - PPP) முறையில் ரூ.7,035 கோடி முதலீட்டு மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முதலீட்டின் திட்டங்கள் சாலை மற்றும் துறைமுக மேம்பாட்டு துறைகளில் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் TNIDB சார்பில் அடிப்படை உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில், சாலை மற்றும் துறைமுக துறைகளில் மேற்கொள்ளப்பட இருக்கும் பல்வேறு திட்டங்கள் விளக்கப்பட்டன.
Cuddalore Greenfield port: இவற்றில் முதன்மையானது கடலூர் புதிய துறைமுகம் (Greenfield port) திட்டம் ஆகும். 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட கடல் புறம்போக்கு நிலத்தில் இந்த துறைமுகம் அமைக்கப்படவுள்ளது. இந்த மாபெரும் திட்டத்திற்கான மொத்த செலவு 3000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் ஒப்புதல் பெற்று டென்டர் விடப்பட்ட நாளில் இருந்து 8 வருடத்தில் முடிக்கப்படும் என ஆரம்பக்கட்ட கணிப்புகளில் கூறப்பட்டு உள்ளது. வங்காளக் கடலில் உப்பனார் மற்றும் பாலாறு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இயற்கையாகவே கப்பல்கள் நிறுத்துவதற்கு ஏற்ற இடமாகக் கடலூர் துறைமுகம் அமைந்துள்ளது.
தற்போது இடைக்கடல் நிறுத்தம் (intermediate anchorage port) செய்யும் வகையில் இயங்கி வரும் இந்த துறைமுகத்தை மேம்படுத்த, ஏற்கனவே அரசு ரூ.159 கோடி முதலீட்டைத் தமிழ்நாடு அரசு செய்துள்ளது.
புதிய துறைமுக திட்டத்தின் கீழ், 13 மில்லியன் டன் சரக்கு கையாளும் திறன் கொண்ட துறைமுகம் அமைக்கப்படும். இந்த புதிய கடலூர் துறைமுகத்தை "Design Build Finance Operate and Transfer" (DBFOT) மாதிரியில் செயல்படுத்தப்படும்.
OMR சாலை மேம்பாடு (Outer Ring Road Improvement): சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மிக நீளமான OMR சாலையில் வண்டலூர் முதல் மீஞ்சூர் வரையிலான 60.5 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப் பகுதியை மேம்படுத்த ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது.
இந்த திட்டம் TOT அதாவது தனியார் நிறுவனத்தின் மூலம் சாலை அமைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பராமரித்து, கட்டணம் வசூலிக்கும். அதன் பின்னர், இந்த சாலை மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
மெரினா கடற்கரை - எலியட்ஸ் கடற்கரை ரோப்வே திட்டம்: சென்னையில் உள்ள மெரினா கடற்கரை (Marina Beach) மற்றும் எலியட்ஸ் கடற்கரை (Elliot's Beach) இடையே சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ரோப் கார் (Ropeway) திட்டத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தேசிய நெடுஞ்சாலைகள் துறைமுக மேலாண்மை நிறுவனம் உடன் இணைந்து, ரூ.285 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. மூன்று நிலையங்களைக் கொண்ட இந்த ரோப் கார் திட்டம், சுற்றுலாப் பயணிகளுக்குச் சென்னையின் கடலை ரசிக்க முக்கிய வாய்ப்பாக இருக்கும்.
ராமேஸ்வரம் - தலைமன்னார் படகுச் சேவை திட்டம்: ராமேஸ்வரம் தீவிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை படகுச் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சர்வதேச பயணிகள் படகுச் சேவை 24 கடல் மைல் தூரத்தைக் கடக்கும்.
இதன் மூலம், இரு நாடுகளுக்கிடையேயான சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report - DPR) தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ.600 கோடி எனக் மதிப்பிடப்பட்டு உள்ளது.
சென்னையில் ECR சாலை: திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14.6 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பால பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.1,300 கோடி மதிப்பீடுள்ள இந்த திட்டம் PPP முறையில் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications