சென்னை: ஒட்டுமொத்த நாட்டிற்கே முன் உதாரணமாக குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கி வருகிறது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பிரதான திட்டமாக இது பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் திமுக பெண்களின் வாக்குகளை கணிசமாக பெற்றதற்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியே காரணம் ஆகும். 2023ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த திட்டம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழக அரசு சார்பாக இந்த திட்டத்தின் மூலம் 1 .14 கோடி பெண்கள் மாதந்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை பெறுகின்றனர். இந்த திட்டத்திற்காக விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள், விண்ணப்பம் செய்ய தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றனர். தகுதி இருந்தும் விடுபட்டவர்கள் கூடிய விரைவில் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வரும் பட்ஜெட்டில் உரிமை தொகை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் இறுதி முழு நீள பட்ஜெட்டாக இது இருக்கும். ஏனெனில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்பதால் இடைக்கால பட்ஜெட்டே தாக்கலாகும்.
இந்த முழு நீள பட்ஜெட்டை கொண்டு தற்போது முதலே வாக்காளர்களை ஈர்க்க வேண்டும் என திமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு மகளிர் உரிமைத்தொகை உயர்வு போன்ற அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு தான். தமிழக அரசுக்கு பின்னால் மகளிர் உரிமைத்தொகை அறிவித்த பல மாநிலங்களில் 1500 ரூபாய், 2000 ரூபாய், 2500 ரூபாய் என வழங்கப்படுகிறது. இதனையும் அரசு தன்னுடைய பரிசீலனையில் ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது.
2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு கடும் போட்டி இருக்கும். விஜய் கட்சி தொடங்கி இருப்பதால் பல முனை போட்டி நிலவும். எனவே வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். அதன் ஒரு பகுதியாக தான் அரசு 1000 ரூபாய் உரிமை தொகையை 1500 ரூபாயாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications