சென்னை: தமிழ்நாடு அரசு பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக மின்சார வாகன உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து செயல்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் மாசை தடுப்பதற்காக பாரம்பரிய டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு மாற்றாக மக்கள் மின்சார கார்களை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சார வாகன உற்பத்தியும் மின்சார வாகன விற்பனையும் பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இந்த மாற்றம் மிக அதிகமாகவே இருக்கிறது.

நாம் சாலைகளில் செல்லும்போது அதிக எண்ணிக்கையில் மின்சார இருசக்கர வாகனங்களையும் கார்களையும் காண முடிகிறது. மத்திய மாநில அரசுகள் மின்சார வாகனங்களுக்கு வழங்கும் மானியங்கள் முக்கிய காரணம். அது தவிர பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களும் கூட போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது மின்சார வாகனங்களை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன.
இந்தியாவில் தற்போதைக்கு மின்சார வாகன உற்பத்தி பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமே முதலிடத்தில் இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் , கர்வ், பன்ச் உள்ளிட்ட மின்சார கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாக கூடிய கார்களாக இருக்கின்றன. இருசக்கர வாகனத்தை பொருத்தவரை ஓலா ஏதர் உள்ளிட்ட நிறுவனங்களின் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு வாகன உற்பத்திக்கான ஆலைகளை நிறுவுவதற்கு பொருத்தமான மாநிலமாக செயல்படுகிறது. ஏனெனில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் என வாகன உற்பத்தி பாகங்களை வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றை வாகனங்களாக ஒருங்கிணைத்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ், வின்பாஸ்ட் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய மின்சார வாகன உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கு முன் வந்திருக்கின்றன.
இதில் வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னுடைய ஆலையை நிறுவ இருக்கிறது. அது தவிர சீனாவின் பிஒய்டி நிறுவனம் ஏற்கனவே சென்னை அருகே இருங்காட்டுக்கோட்டையில் மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தை அமைத்துள்ளது. பிரபல ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் தான் தன்னுடைய மின்சார வாகன உற்பத்தி ஆலையை நிறுவி செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மாநில அரசு தமிழ்நாட்டை மின்சார வாகன உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது . கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சேலம், சென்னை ஆகிய ஆறு நகரங்களில் மின்சார வாகன உற்பத்திக்கான ஆலைகளை நிறுவுவதற்கு தேவையான உள்கட்டமைப்புகளை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியன் இன்டெக்ஸ் என்ற அமைப்பு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த ஆறு நகரங்களிலும் தமிழ்நாடு அரசு மின்சார வாகன உற்பத்திக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் அடுத்த சில ஆண்டுகளில் மின்சார வாகன உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாறும் அப்போது இந்த ஆறு நகரங்களும் அதில் முக்கிய பங்களிக்கும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications