சென்னை: தமிழ்நாட்டிற்கான 2025 - 26ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் கவனிக்கத் தக்கது கப்பல் கட்டுமான துறை சம்பந்தப்பட்ட அறிவிப்பு.
தமிழ்நாட்டை உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக நிறுவிட 'தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை 2025' ஒன்றை அரசு அறிமுகப்படுத்தும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். கப்பல் மற்றும் படகு வடிவமைப்பு மற்றும் கப்பல் சட்டகம் கட்டுருவாக்கம் , கப்பல் இயந்திர உற்பத்தி ஆகிய துறைகளில் முதலிடு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதை நோக்கங்களாக கொண்டு இப்புதிய கொள்கை அமைந்திடும் என அவர் உறுதி அளித்தார்.

இந்தத் தொழிலின் வருகையின் மூலம் கடலூர் மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 30000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என கூறிய அவர் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை வளர்ச்சிக்கும் இக்கொள்கை வித்திடும் என தெரிவித்தார். இந்தியாவில் கப்பல் கட்டுமான துறைக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கப்பல் கட்டுமான பிரிவில் இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என நடவடிக்கை எடுத்து வருகிறது.
2033 ஆம் ஆண்டில் இந்தியாவில் கப்பல் கட்டுமான சந்தை 8 பில்லியன் டாலர் என்ற மதிப்பை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அதில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் இலக்கு. தமிழ்நாட்டை பொறுத்தவரை கப்பல் கட்டுமானம் என்பது சங்க காலத்தில் இருந்தே இருக்கிறது. கப்பல் கட்டுமானமும், கப்பல் போக்குவரத்தும் நமது வரலாற்றுடன் தொடர்பு கொண்டது.
இதனிடையே மாநில நிதி செயலாளர் உதயச்சந்திரன் ஜப்பான் மற்றும் தென் கொரிய கப்பல் கட்டுமான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அவர்களிடமிருந்து நல்ல எதிர்வினை வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு கப்பல் கட்டுமான தொழில் நல்ல வளர்ச்சி தரக்கூடிய தொழில் என்றும் தென்கொரிய மற்றும் ஜப்பானை சேர்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய ஆலைகளை நிர்வகிக்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறியுள்ளார்.
கடலூர் , தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கப்பல் கட்டுமான தளங்கள் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் பெரிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார். தொழில்துறை செயலாளரான அருண் ராய் இந்த துறையால் எம்எஸ்எம்ஈ மிகப்பெரிய அளவில் பலன் பெறும் என்றார். கப்பல் கட்டுமான துறையில் உருவாகும் ஒரு நேரடி வாய்ப்பு வேலை ஏழு மறைமுக வேலைகளை உருவாக்கி தரும் என்றும் தெரிவித்துள்ளார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications