சென்னை: தமிழ்நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் பதிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது . தற்போது இந்தியாவில் சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில் மத்திய மாநில அரசுகள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவங்குவதற்கு நிதி உதவி ,கடனுதவி மற்றும் பயிற்சி என பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.
தமிழ்நாடு அரசை பொறுத்தவரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி அந்த தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது மற்றும் மக்களிடம் அதனை சென்று சேர்ப்பது தொடர்பான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. இதற்காக ஸ்டார்ட் அப் டிஎன் (StartupTN) என்ற நிறுவனத்தையே தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த ஸ்டார்ட் அப் டிஎன் நிறுவனம் ஸ்டார்ட் அப்களுக்கு தேவையான முதலீடு மட்டும் இல்லாமல் சந்தைபடுதலுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி தந்து, அதற்கு தேவையான பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. ஸ்டார்ட் அப் டிஎன் நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக சிவராஜ ராமநாதன் செயல்பட்டு வருகிறார். இவர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்டார்ட் திருவிழாக்களை நடத்தி புத்தொழில்களை ஊக்குவித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறையிடம் பதிவு செய்யப்பட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளது. மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையின் கீழ் தமிழ்நாட்டில் இருந்து 10,000க்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, கோவை போன்ற பெருநகரங்கள் மட்டுமில்லாமல் திருநெல்வேலி தூத்துக்குடி என அனைத்து மாவட்டங்களிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. தகவல் தொழில்நுட்பம் ,வேளாண் பொருட்களுக்கு மதிப்பு கூட்டி விற்பனை செய்வது, உணவு பதப்படுத்துவது போன்ற துறைகளில் அதிக எண்ணிக்கையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
2021 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2300 ஆக இருந்த நிலையில் தற்போது அது 10,000 ஐ கடந்துள்ளது என தெரிவித்திருக்கும் சிவராஜ ராமநாதன் கூடிய விரைவில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மையமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாநில அரசு புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications