சென்னை: உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய மின்னணு சாதன சந்தையாக தமிழ்நாடு உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. அமேசான் இந்தியா நிறுவனத்தின் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு இயக்குனரான ரஞ்சித் பாபு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவிலேயே அமேசான் நிறுவனம் அதிகளவிலான கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் பொருட்களை தமிழ்நாட்டில் தான் விற்பனை செய்கிறதாம்.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 35 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது என ரஞ்சித் பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள, அமேசான் இந்தியா நிறுவனத்தின் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு இயக்குனர் ரஞ்சித் பாபு அமேசான் நிறுவனம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவிலான மின்னணு சாதன பொருட்களை விற்பனை செய்கிறது என கூறியுள்ளார். குறிப்பாக இங்கே 20,000 ரூபாய்க்கும் மேல் விலை கொண்ட பொருட்களின் தேவை அதிகமாக இருக்கிறது என கூறுகிறார்.

ஸ்மார்ட் போன்கள், பெரிய திரை கொண்ட தொலைக்காட்சிகள், ஏசி, ஹெட்போன், லேப்டாப்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் இரண்டு கதவு கொண்டு ஃபிரிட்ஜ்கள் ஆகியவைதான் தமிழ்நாட்டில் அதிக அளவில் ஆர்டர் செய்யப்படுகிறது என கூறுகிறார். சென்னையை அடுத்து சேலம் ,கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மின்னணு சாதனங்களுக்கான ஆர்டர்கள் வருகின்றன என அவர் கூறியுள்ளார். வரும் 27ஆம் தேதி முதல் அமேசான் நிறுவனத்தின் சார்பாக தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் எனப்படும் தள்ளுபடி உடன் கூடிய விற்பனை தொடங்க இருக்கிறது.
இதில் அமேசான் நிறுவனத்தின் விற்பனையாளர்களின் எண்ணிக்கை 14 லட்சத்திலிருந்து 16 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும் தள்ளுபடி விற்பனை விழாவில் சுமார் 13 கோடி பொருட்கள் விற்பனைக்கு வர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விழா கால தள்ளுபடி விற்பனையின் போது "போன் செட்டப் சர்வீஸ் சென்டர்" ஒரு புதிய சேவையை அமேசான் வழங்க இருப்பதாக கூறியுள்ளார். இதன்படி வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் ஃபோன்களை வாங்கிய பிறகு அதனை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பன உள்ளிட்ட சேவைகளை தொழில் முறை நிபுணர்களிடமிருந்து பெற முடியும் என கூறியுள்ளார். இதற்காக வாடிக்கையாளர்கள் கூடுதலாக 120 ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications
