பொதுவாக விடுமுறை நாட்கள் என்று வரும்போது மக்கள் ஆரவாரமாகத் தங்கள் இருப்பிடத்திலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்தான். அந்த வரிசையில், தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் வருவதால் மக்களின் வரத்து சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த சிறப்புப் பேருந்துகள் சென்னை, கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பல்வேறு இடங்களிலிருந்து புறப்படும் என்றும் கூறப்படுகிறது.
பண்டிகை விடுமுறைகள் மட்டுமில்லாமல், பள்ளி விடுமுறைகளும் இந்த மாதத்தில் வரும். தற்போது பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தேர்வுகளுக்குப் பிறகு டிசம்பர் 23, 2024 முதல் விடுமுறை நாட்கள் தொடங்கும். இந்த விடுமுறையின் தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான விடுமுறைகளும் வழங்கப்படும். இந்நிலையில், வெளியூரில் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கோ அல்லது சுற்றுலா செல்வதற்கோ பயணிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருப்பர். இதைக் கருத்தில் கொண்டு கிறிஸ்துமஸ் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களில் சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மாநில விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 20/12/ 2024 (வெள்ளிக்கிழமை), 21/12/2024 (சனிக்கிழமை), 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை), கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்தும், மற்ற இடங்களிலிருந்தும் அதிகமான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி, நாகர்கோயில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு டிசம்பர் 20-ஆம் தேதியான வெள்ளிக்கிழமை அன்று 325 பேருந்துகளும், டிசம்பர் 20-ஆம் தேதியான சனிக்கிழமை அன்று 280 பேருந்துகளும் இயக்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் சென்னை கோயம்பேடிலிருந்து நாகை, திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூருக்கு 20/12/2024 மற்றும் 21/12/2024 ஆகிய தேதிகளில் 81 பேருந்துகள் மொத்தமாக இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், 20/12/2024 மற்றும் 21/12/2024 தேதிகளில் மாதவரத்திலிருந்து மொத்தம் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று தங்களின் சொந்த ஊர்களில் இருந்து சென்னை போன்ற மற்ற இடங்களுக்கு திரும்பும் பயணிகளுக்காக அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்குவதற்கும் ஏற்பட்டுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமைக்கு 13,864 பயணிகளும், சனிக்கிழமைக்கு 11,642 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமைக்கு 9,063 பயணிகளும் பயணிப்பதற்காக முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதால், பயணிகள் தங்களின் சுமூகமான பயணத்தை மேற்கொள்வதற்கு www.tnsc.in மற்றும் மொபைல் செயலி மூலம் தங்கள் பயணத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்புப் பேருந்துகள் இயங்குவதைக் கண்காணிப்பதற்காக போதுமான அதிகாரிகள் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications