சொத்து பதிவில் தொடங்கி திருமண பதிவு வரை பத்திர பதிவு அலுவலகங்களுக்கு சென்றாலே அந்த நாளே முடிந்துவிடும். அனைத்து ஆவணங்களையும் முறையாக கொண்டு செல்ல வேண்டும். அதில் ஒன்று தவறினால் கூட மீண்டும் டோக்கன் வாங்கி ஒரு நாள் முழுக்க காத்திருக்க வேண்டும். ஆனால் இனி அந்த நிலை இல்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் காகிதம் இல்லாத ஆவண பதிவு, நேரடி வருகை இல்லாத ஆவண பதிவு மற்றும் தானியங்கி பத்திர உருவாக்கம் உள்ளிட்ட 18 பத்திரப்பதிவு சார்ந்த சேவைகளை பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பெற முடியும். புதிய வாட்ஸ் அப் சேவையும் கூட கொண்டு வரப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பத்திரப்பதிவு நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் பத்திரப்பதிவு துறையை மேலும் நவீனப்படுத்தி இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வரும் நோக்கில் தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறைக்கான ஸ்டார் 3.0 என்ற ஒரு புதிய மென்பொருள் திட்டத்தை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது.
ஆவணங்களை கையில் எடுத்து செல்ல வேண்டாம்: இதன்படி பொதுமக்கள் காகிதம் இல்லாமல் இணையவழியில் ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொத்தினை எழுதிக் கொடுப்பவர், எழுதி வாங்குபவரின் அடையாள ஆவணங்களை கையில் கொண்டு செல்ல வேண்டாம். ஆதார் வழி பெறப்பட்ட otp அல்லது விரல் ரேகை வழியாக விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உடனுக்குடன் ஆவணம் பதிவு செய்யப்பட்டு விடும். மேலும் சார்பதிவாளரின் மின்னணு கையொப்பம் போடப்பட்ட மின்னணு ஆவணமாக இணையம் வழியாகவே பொது மக்களுக்கு பத்திரமும் அனுப்பி வைக்கப்பட்டுவிடும். இந்த முறையில் பல லட்சக்கணக்கான காகிதங்கள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நேரில் செல்ல வேண்டாம்: ஒரு கட்டுமான நிறுவனத்திடம் இருந்து புதிய அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் போது போதும், புதிதாக உருவாக்கப்பட்ட மனை பிரிவுகளில் இருந்து மனைகளை மட்டும் வாங்கும் போதும் மக்கள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி ஆன்லைன் வழியாகவே பத்திரபதிவுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை. சமர்ப்பிக்கப்பட்ட ஆவண விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனுக்குடன் ஆவணம் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும். எனவே நீங்கள் புதிதாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பினை வாங்குகிறீர்கள் அல்லது ஒரு மனை வாங்குகிறீர்கள் எனும் போது சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை.
தானியங்கி பத்திரம் உருவாக்கம்: பொதுமக்கள் பிறர் உதவியின்றி தங்களின் ஆவணத்தை தாங்களே உருவாக்கும் வண்ணம் கேள்வி பதில் வடிவிலான தானியங்கி பத்திரம் உருவாக்கி தரப்படும் வகையில் இந்த மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சொத்து தொடர்பான குறைந்தபட்ச விவரங்களை அளித்தாலே போதும் அந்த சொத்து சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் உருவாக்கி தந்துவிடும்.
கியூஆர் கோடு கட்டணம்: தற்போது ஆன்லைன் கட்டண வசதியுடன் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக பணம் செலுத்த வேண்டிய நிகழ்வுகளில் கியூ ஆர் கோடு வழியாக பணம் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
களப்பணியின்றி ஆவணம் வழங்குதல்: அடுக்குமாடி குடியிருப்பு மறு விற்பனை ஆவணத்தில் கார் பார்க்கிங் மற்றும் லிஃப்ட் போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்யும் நிலையில் கட்டிட களப்பணியின்றி பதிவு செய்த அன்றே ஆவணங்களை திரும்ப வழங்கும் வகையில் மென்பொருள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் சேவை: TNREGINET என்ற கைபேசி செயலி வாயிலாக வில்லங்க சான்று, ஆவணப்பதிவுக்கான முன்பதிவு டோக்கன் நிலை, வழிகாட்டி மதிப்பீடு, திருமணம், சங்கம், கூட்டு நிறுவனம் சீட்டு நிறுவனம் பதிவு, ஆவணப்பதிவு விபரம், சொத்து மதிப்பு கணக்கீடு ஆகியவற்றை எளிதாக அறியும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவு துறையின் வெவ்வேறு சேவைகளின் நிலை தொடர்பான தகவல்கள் வாட்ஸ் அப் வழியாக இனி மக்களுக்கு தெரிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications