இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்படும் விகிதம் 140% உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களின் மதிப்பு 25,000 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை விட 140% அதிகமாகும்.
ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்ஃபோன்கள் தான் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் வரையிலான பத்து மாத காலத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு செல்போன்களின் மதிப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது. இதுவே அதற்கு முந்தைய நிதியாண்டில் 99,120 கோடி ரூபாயாக இருந்தது. அதாவது 56 சதவிகிதம் இது உயர்வு கண்டுள்ளது.

இவ்வாறு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களில் 70% ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் தான். இந்த ஐபோன்களும் தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய ஃபாக்ஸ் கான் ஆலைகளில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்களில் 50 சதவீதம் தமிழ்நாட்டில் இருக்கும் ஃபாக்ஸ்கான் ஆலையில் தான் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இது முந்தைய நிதி ஆண்டில் 43 சதவீதமாக இருந்தது.
அதேபோல 22 சதவீத ஏற்றுமதி டாடா எலக்ட்ரானிக்ஸ் கையகப்படுத்திய கர்நாடகாவில் செயல்படும் விஸ்டிரான் ஸ்மார்ட்போன் ஆலையிலிருந்து தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 சதவீதம் தமிழ்நாட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கையகப்படுத்திய பெகட்ரான் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட் போனில் 20 சதவீதம் தென்கொரியாவின் சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தமானது.
மத்திய அரசு கொண்டு வந்த உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களோடு இணைந்து செல்போன் உற்பத்தி ஆலைகளை நிறுவி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தான் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுவதும் தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிஎல்ஐ எனப்படும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் இந்தியாவில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி 10,213 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாக 1.37 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்கிறதாம்.
அதேபோல இந்தியாவில் 2014 -15 ஆம் ஆண்டில் 19,000 ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் 2023-24 ஆம் ஆண்டில் இது 4,22,000 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆண்டுதோறும் 41% என்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த 74 சதவீத ஸ்மார்ட்போன்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஆனால் தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் செல்போன்களில் 99.2% இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது என்பதே இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தி துறையின் வளர்ச்சியை காட்டும் புள்ளி விவரமாகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications