தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால் தவெகவுக்கு காங்கிரஸ் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தந்துள்ளன.
விஜய்க்கு தற்போது 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதில் விஜய் இரண்டு தொகுதிகளில் வென்றதால் ஒன்றை ராஜினாமா செய்துவிடுவார் , ஒருவர் சபாநாயகர் ஆகிவிடுவார். எனவே எண்ணிக்கை 115ஆகிவிடும். இன்னும் 3 இடங்கள் கிடைக்கும்பட்சத்தில் அவர் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தந்தால் விஜய் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் உண்டாகியுள்ளது.

வி.சி.க. இன்று முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஆதரவு கிடைக்கும்போது, தவெகவின் மொத்த பலம் 117ஆக இருக்கும். பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதலாக ஒரு எம்எல்ஏவின் ஆதரவு விஜய்க்கு தேவை. இந்நிலையில், நள்ளிரவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தங்களின் ஒரு எம்எல்ஏ காமராஜை காணவில்லை. அவர் விலை போய் இருக்கலாம் என்றார். தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று சாடினார். பின்னர் அந்த காமராஜையே உடன் அழைத்து கொண்டு மீண்டும் ஆளுநர் மாளிகை சென்ற டிடிவி தினகரன் குதிரை பேரம் நடப்பதாக குற்றம்சாட்டினார்.
காமராஜின் ஆதரவு இருப்பதாக தவெக போலி கடிதம் கொடுத்ததாக கூறியுள்ளார். இது குறித்து கிண்டி காவல் நிலையத்தில் டிடிவி தினகரன் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், காமராஜ் கடிதம் கொடுத்த வீடியோ ஒன்றை தவெக தரப்பு வெளியிட்டது.
இதற்கிடையே தற்போதுள்ள அரசின் பதவிக்காலம் மே 10ஆம் தேதியான நாளையுடன் முடிகிறது. அதற்குள் விஜய் ஆட்சி அமைக்காவிட்டால் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வருமோ என்ற கேள்வி எழுகிறது. ஆளுநர் அர்லேகர் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பேன் என பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் தற்போது வரை விஜய்யிடம் அந்த பெரும்பான்மை இல்லை.

இந்த சூழலில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்த அர்லேகர் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசிப்பேன் என்றும் குதிரை பேரத்திற்கு அனுமதி அளிக்கமாட்டேன் என்றும் கூறி இருந்தார். அவர் கூறிய 2 நாட்கள், மே 10ஆம் தேதி ஆட்சி முடியும் காலம் ஆகியவை நெருங்கும் நிலையில் குதிரை பேர புகார் எழுந்துள்ளது.
குதிரை பேர புகார் நிரூபணம் ஆனால் அதனை குறிப்பிட்டு ஆளுநர் அர்லேகர், குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கலாம் என சொல்லப்படுகிறது. எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியவில்லை, தனிப்பெருங்கட்சி குதிரை பேரம் நடத்துகிறது என்பதால் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வரலாம் என அவர் கூறும் பட்சத்தில் தமிழ்நாட்டில் 6 மாதங்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.


Click it and Unblock the Notifications

