தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின் (Tangedco) தரவுகளின்படி தமிழகத்தில் தனிநபர் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2023-24ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தனிநபர் மின்சார பயன்பாடு 1,792 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் 1640 யூனிட் மின்சாரத்தை விட அதிகமாகும்.
பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகமாக இருந்தால் எப்படி நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இருக்கிறது என கூறப்படுகிறதோ, அதேபோல் மின்சார பயன்பாடும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய அளவீடாகும்.

இதுகுறித்து பேசிய Tangedco அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர், வீட்டு உபயோக பொருட்கள், ஏர் கண்டிஷனர், குளிர்சாதன பெட்டி மற்றும் மின்சார வாகனங்கள் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்ததால் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகள் விரிவடைந்து வருவதும் மின்சார பயன்பாட்டை அதிகரிக்கச் செய்துள்ளதற்கு முக்கியமான காரணமாகும். மத்திய மற்றும் மாநில அரசுகள் மின்சார பயன்பாடு அதிகரிப்பதைக் கவனத்தில் கொண்டு தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது மாநிலத்தின் சராசரி மின்சார பயன்பாடு 350 முதல் 379 மில்லியன் யூனிட்டுகள் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் வீடு மற்றும் வணிக இடங்கள் உள்ளிட்ட கட்டுமான துறை வேகமாக வளர்ந்து வரும் வேளையில், இந்த பிரிவு தான் மாநிலத்தின் மொத்த மின்சார பயன்பாட்டில் 80% க்கும் அதிகமான பங்கீட்டை வகிக்கிறது. வீட்டு மற்றும் வணிக இடங்கள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுவது மூலம் மின்சார தேவையை மேலும் அதிகரிக்கும்.
இந்த அதிகரிக்கும் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யத் தமிழ்நாடு அரசு பசுமை வழிகளில் மின்சார உற்பத்தியை அதிகரித்த முயற்சி செய்து வருகிறது. இதில் முக்கியமாக சோலார், காற்றாலை போன்ற சுற்றுச்சூழல்-க்கு பாதிப்பு ஏற்படாத வழிகளை அதிகம் சார்ந்து இருக்கும் நிலையைத் தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது.
இதேவேளையில் மாநிலம் முழுவதும் மக்கள் மின்சார சேமிப்பு மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களில் மின்சார சேமிப்பு சாதனங்கள் மூலம் மின்சார சீரமைப்பு செய்வது, குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் கருவிகளைப் பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் மின்சார பயன்பாட்டைக் குறைத்து தடையில்லா மின்சாரத்தைத் தமிழ்நாட்டின் கிராமத்திலும் உறுதி செய்ய முடியும்.
மத்திய அரசின் ஆற்றல் திறன் பணியகம் (BEE) ஆதரவுடன், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான மின்சார நிறுவனம் நிபுணர்களுடன் இணைந்து நுகர்வோரின் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மின்சார சேமிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, விவசாயிகள் பழைய மோட்டார் பம்புகளை மாற்ற ஊக்குவிக்க வேண்டும் என்றும், இதனால் மின்சார பயன்பாடு கணிசமாக குறையும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications