தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், ஏற்கனவே பெறப்பட்ட முதலீட்டு வாக்குறுதிகளை திட்டங்களாக மாற்றும் நோக்கத்துடனும் நவம்பர் மாதத்தில் சிறப்பு முதலீட்டு மாநாடு ஒன்றை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில்துறை அமைச்சர் ஜெர்மனி நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஏற்கனவே முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியுள்ளது, மேலும் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கும் சுற்று பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் இதுவரை வந்த முதலீட்டு வாக்குறுதிகளை திட்டங்களாக மாற்றும் நோக்கத்துடன் நவம்பரில் தமிழக அரசு Investment Conversion Conclave-ஐ நடத்த இருக்கிறது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு இதுவரை 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு அதன் மூலம் 1.14 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு உறுதிகளை பெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு பல்வேறு தொழில்துறை நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி இந்து ஆங்கில நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இது தவிர வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் ஜெர்மனி நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜெர்மனியில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்கள், மற்றும் வர்த்தக பிரதிநிதிகளைச் சந்தித்து தமிழகத்தில் நிலவும் தொழில் துறைக்கு சாதகமான சூழல், அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அவர் எடுத்துரைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியுடன் தமிழகம் ஏற்கனவே வலுவான பொருளாதார உறவுகளை கொண்டுள்ள நிலையில், இந்த புதிய பயணம் மற்றும் நவம்பர் மாநாடு மூலம் மேலும் பல புதிய நிறுவனங்களின் முதலீடுகள் தமிழகத்திற்கு வர வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியை சேர்ந்த பல நிறுவனங்களும் இந்தியாவில் மகாராஷ்ட்ராவுக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் தான் அதிக தொழில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன என ஜெர்மன் நாட்டு தூதர் மைக்கேல் ஹேஸ்பர் கூறியுள்ளார். 120க்கும் அதிகமான ஜெர்மன் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அமைச்சரின் பயணம் மேலும் பல முதலீடுகளை ஈர்க்கும் என சொல்லப்படுகிறது.
தொழில்துறையில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் முதலீடுகளும் உற்பத்தியும் அதிகரிப்பது இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மாநில பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தவும் உதவும்.


Click it and Unblock the Notifications

