சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களில் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும், காலநிலை மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய , மாநில அரசுகள் பொதுமக்கள் மத்தியில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு "தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை" வெளியிட்டது. இதன்படி மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 2022 டிசம்பர் 31ஆம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு 100% சாலை வரி விலக்கு அளிக்கப்பட்டது. பின்னர் இதனை 2025 டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டு இருக்கக்கூடிய அரசாணையில் மின்சார வாகனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வரிவிலக்கு சலுகை டிசம்பர் 31ஆம் தேதி ஆன இன்றுடன் முடிவடைகிறது இந்த நிலையில் இந்த 100% வரி விலக்கை 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை என மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பிக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறது.

இந்த வரி விலக்கு சலுகை மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ் வரையறை செய்யப்பட்டுள்ள அனைத்து விதமான போக்குவரத்து வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் என அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது.
2025 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு 7.8% என அதிகரித்துள்ளது. இந்த வேகத்தை தக்க வைக்கவும் தமிழ்நாடு மின்சார வாகன கொள்கையின் நோக்கங்களை எட்டவும் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் போக்குவரத்து ஆணையரின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவினை எடுத்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. எனவே மின்சார வாகனங்களை வாங்குவோர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுகிறார்கள்.
இந்த வரி சலுகை மூலம் ஏராளமானவர்கள் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க முன் வருவார்கள். தமிழ்நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் அதே வேளையில் அதற்கான சார்ஜிங் கட்டமைப்புகளையும் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வாகன உரிமையாளர்கள் மத்தியில் முன் வைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications