தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து மாநில முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்றன. ஒருபுறம் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான பணிகளை தீவிர படுத்திய வண்ணம் இருக்கிறது. அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றன.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி , விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் என இந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் வழக்கமாக தங்களுக்கு கிடைக்கக்கூடிய அரசின் சேவைகள் கிடைக்குமா என்ற குழப்பம் மக்களிடையே நீடிக்கிறது. குறிப்பாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கக்கூடிய காலத்தில் புதிதாக ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பம் செய்ய முடியுமா, ஏற்கனவே இருக்கக்கூடிய தங்களுடைய ரேஷன் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ள முடியுமா என மக்கள் குழப்பத்தோடு இருக்கின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தற்போதைக்கு புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்கின்றனர் அதிகாரிகள். இதுவரை ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்தவர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு அதாவது மே 4 ஆம் தேதிக்கு மேல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கின்றனர்.
அதே வேளையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறக்கூடிய ரேஷன் அட்டை குறை தீர்ப்பு முகங்கள் முகாம்கள் தற்போதைக்கு நடைபெறாது என தெரிவித்துள்ளனர். எனவே மே 4ஆம் தேதிக்கு பிறகு தான் ரேஷன் அட்டை தொடர்பான திருத்த முகாம்களும் சிறப்பு குறை தீர்ப்பு முகாம்களும் நடைபெறும். இருந்தாலும் பொதுமக்கள் தொடர்ச்சியாக TNPDS இணையதளம் மூலமாக தங்களுடைய ரேஷன் கார்டில் மாற்றங்கள் வேண்டி விண்ணப்பம் செய்யலாம்.
அதேபோல புதிய ரேஷன் அட்டை அல்லது நகல் ரேஷன் அட்டை கோரியும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களையும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெயர் சேர்ப்பது, நீக்குவது முகவரி மாற்றுவது போன்ற திருத்தங்களுக்கு ஆன்லைனிலேயே ஒப்புதல் அளிக்கப்படும் என சொல்லப்படுகிறது. புதிய ரேஷன் அட்டை விண்ணப்பங்கள் மே 4ஆம் தேதிக்குப் பிறகு பரிசீலனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
திமுக மகளிர் உரிமை தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளது. அதேபோல அதிமுக சார்பில் குலவிளக்கு என்ற திட்டம் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பெண்களுக்கான உரிமைத் தொகை திட்டங்களை அறிவித்திருக்கின்றன. இவற்றுக்கு அடிப்படை ஆதாரமாக ரேஷன் கார்டுகள் தான் பயன்படுத்த போகின்றன என்பதால் ஏராளமானவர்கள் புதிதாக ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பம் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு மே நான்காம் தேதிக்குப் பிறகுதான் புதிய ரேஷன் அட்டைகள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications