தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை வேகமாக அதிகரித்து வருகிறது. திடீரென அரிசி விலை உயர்வதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடா? மேலும் அரிசி விலை உயருமா என்பதை விரிவாக பார்க்கலாம்.
அரிசி நமது பிரதான உணவு, இதனால் அரிசி விலை தமிழ்நாடு முழுவதுமே முக்கியமாக பேசப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது நாம் அரிசி உணவை எடுத்து கொள்கிறோம். எனவே அரிசி விலையில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும் நம் வீட்டு பட்ஜெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பொன்னி, இட்லி அரிசி, பச்சரிசி என மக்கள் அதிகம் பயன்படுத்தும் பல்வேறு ரக அரிசிகளின் விலையும் ஒரு மூட்டைக்கு சுமார் 300 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக சில்லறை விற்பனையில் ஒரு கிலோ அரிசியின் விலை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத கால அளவில் தான் அரிசி விலை இப்படி அதிகரித்துள்ளது. இன்னும் வரும்நாட்களிலும் அரிசி விலை உயரும் எனவே மக்கள் அரிசி மூட்டைகளை வாங்கி வைத்து கொள்ளுங்கள் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுவதை பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் உண்மையில் அரிசி தட்டுப்பாடு இருக்கிறதா? அரிசி விலை மேலும் உயருமா என்பது குறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. துளசிமணி அவர்களை தொடர்பு கொண்டது குட் ரிட்டர்ன்ஸ் தமிழ். அப்போது அவர் பல்வேறு தகவல்களை விளக்கமாக பகிர்ந்தார்.
தமிழ்நாட்டில் உயர்தரம் கொண்ட பொன்னி அரிசி 25 கிலோ மூட்டையின் விலை 2050 ரூபாயில் இருந்து 2300 ரூபாயாக உயர்ந்துள்ளது என கூறியுள்ளார்.அதுவும் கடந்த ஒரு மாத காலத்தில் தான் அரிசி விலை வேகமாக அதிகரித்துள்ளது என்கிறார். குறிப்பிட்ட சில வகை அரிசி ரகம் வெளி மாநிலங்களீல் இருந்து வரத்து குறைந்ததால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டினார்.

மேற்கொண்டு அரிசி விலை ஏற வாய்ப்பில்லை என கூறியுள்ள துளசிமணி, இரண்டாம் பருவ நெல் பயிர்கள் வந்தவுடன் அரிசி விலை குறையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒரு போக நெல் விளைச்சலுக்கு தான் பயன்படுத்த முடிந்தது. இதனால் தான் அரிசி வரத்து குறைந்து விலை ஏறியது என்கிறார். இரண்டாம் போகத்துக்கு தண்ணீர் இல்லாமல் போனது முக்கிய காரணம் என கூறுகிறார்.
மழை பெய்து தற்போது தொடங்கும் நெல் சாகுபடி கை கொடுக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். மேற்கொண்டு அரிசி விலை ஏறுவதற்கு வாய்ப்பில்லை என கூறும் அவர் அடுத்த 2 மாதங்களில் புது அரிசி வர தொடங்கும் எனவே விலை குறையும் வாய்ப்பு உண்டாகும் என கூறுகிறார்.
தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை என கூறும் அவர் குறுவை சாகுபடி தந்த ஏமாற்றமே இந்த நிலைக்கு காரணம் என்றும் தற்போது போடப்பட்டுள்ள நெற்பயிர்கள் சாகுபடி அடுத்த 60 நாட்களில் தொடங்கும் என்றும் அதன் பின் அரிசி விலை குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications

