ஈரான் போர், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், எல்பிஜி கேஸ் சிலிண்டர், ஹோட்டல் உணவு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில் மக்களுக்கு அடுத்த இடி இறங்கியுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் பிரதான உணவு அரிசி தான். மூன்று வேளையும் கூட அரிசி சாப்பிடும் மக்கள் உள்ளனர், பெரும்பாலான குடும்பங்களில் மதியம் ஒரு வேளை கண்டிப்பாக அரிசி சாதமாக இருக்கும். பிரியாணி, கலவை சாதம், இட்லி என எல்லாமே அரிசியை அடிப்படையாக கொண்ட உணவுகள் தான். இந்நிலையில் தான் மக்களுக்கு அரிசி விலை உயர்வு பெரிய அதிர்ச்சியாக வந்துள்ளது.

தமிழகத்தில், அரிசி விலை கிலோவுக்கு, 5 முதல், 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது என நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. போதிய மழையின்மை, நெல் விளைச்சல் குறைவு உள்ளிட்டவை காரணமாக அரிசி வரத்து குறைந்து அரிசி விலையும் உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் அரிசி பற்றாக்குறை நிலவுவதால் அதனை ஈடு செய்யும் வகையில் ஆண்டுக்கு, 30 லட்சம் டன் உயர் ரக சன்ன அரிசியை, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து, தான் கொண்டு வரப்படுகிறது.
ஆனால் போதிய மழை இல்லாததால், உயர் ரக சன்ன நெல் விளைச்சல் பாதித்துள்ளது. இது தவிர, லாரி வாடகை கட்டணம், 25 சதவீதம் உயர்வு ஆகிய காரணங்களால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசி கிலோவுக்கு, 5 முதல், 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாம். இது நேரடியாக வாடிக்கையாளர் மீது தான் சுமத்தப்படுகிறது.
கோடை மழை கை கொடுக்காததால், கோடை மகசூலும், தற்போதைய குறுவை சாகுபடியும் பொய்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேட்டூர் அணையும் இந்த ஆண்டு திறக்கப்படாததால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் விளைச்சலை உறுதி செய்ய முடியாது. இதனால் அரிசி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க, மாநில செயலர் பரணீதரன் நாளிதழ்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து, அதிகளவில் சன்ன ரக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில், நெல் இருப்பு குறைவாக உள்ளதால், அங்குள்ள ஆலைகளின் தேவைக்கு போகவே, எங்களுக்கு நெல் கிடைக்கிறது. சில மாதங்களில், 1 கிலோ நெல்லுக்கு, 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. தவிர, லாரி வாடகையும் உயர்ந்துள்ளது. இதுவே அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்.
குறிப்பாக அதிகளவில் ஏற்றுமதியாகும் சீரக சம்பா அரிசி, 2025 ஏப்ரல் மாதம் கிலோ 84 ரூபாயாக இருந்தது. தற்போது, 180 ரூபாய் என விற்கப்படுகிறது. ஓராண்டில், கிலோவுக்கு, 96 ரூபாய் விலை உயர்ந்துள்ளது என கூறும் அவர் மழைப்பொழிவு இல்லாதது மற்றும் சன்ன ரக நெல் உற்பத்தி குறைவு ஆகியவை அரிசி விலையை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கிறார்.


Click it and Unblock the Notifications

