தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. காய்கறி, பழங்களின் விலைவாசி உயர்வு, மளிகை பொருட்கள் விலை உயர்வு என மக்கள் அல்லல்படும் நிலையில் அரிசி விலை உயர்வு இன்னும் அதிர்ச்சி தரும் வகையில் இருந்தது. எப்போது தான் அரிசி விலை குறையுமோ என மக்கள் காத்திருந்த நிலையில் அரிசி வியாபாரிகள் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
இட்லி, தோசை, சாதம் என நமது பெரும்பாலான உணவுகள் அரிசியை அடிப்படையாகவே கொண்டுள்ளது. எனவே தான் அரிசி விலை உயர்வு நம் பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த மூன்று மாதங்களாக அரிசி விலை தொடா்ந்து உயா்ந்து வந்ததால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

சன்ன ரக அரிசி மூட்டைக்கு 800 ரூபாயும், மோட்டா ரக அரிசி மூட்டை 600 ரூபாயும் உயர்ந்ததால் மாதாந்திர குடும்ப பட்ஜெட்டிலேயே துண்டு விழுந்தது. போதிய விளைச்சல் இல்லாதது, திடீரென நெல் வரத்து பாதியாக குறைந்தது ஆகியவை தான் அரிசி விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.
பிரச்சினையை சமாளிக்க தமிழக அரசு அமுதம் மற்றும் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட 250 அங்காடிகளில் கிலோ 30 ரூபாய்க்கு சன்னரக அரிசி விற்பனை செய்தது. பொன்னி புழுங்கல் அரிசி கிலோ 60 ரூபாய்க்கும், பச்சரிசி கிலோ 46 ரூபாய்க்கும் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் விற்பனை செய்யப்படுகிறது.
அதே வேளையில் தமிழகத்தில் நெல், அரிசி தட்டுப்பாடின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதை உறுதி செய்யும் வகையிலும் நெல் மற்றும் அரிசி இருப்புக்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில், தற்போது நெல்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால், அரிசி விலை விரைவில் குறைய தொடங்கும் என அரிசி வியாபாரிகள் கூறியுள்ளனர். ஜனவரி மாதமே விலை குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது நெல் வரத்து சற்று அதிகரித்துள்ளதால், ஜனவரி மாதம் அரிசி விலை குறையும் என அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் கோபி தெரிவித்துள்ளார்.
முன்னதாக விலை உயா்வால் தமிழகத்தில் அரிசி விற்பனை சரிந்தது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ரேஷன் அரிசியை அதிகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனா். விலை உயா்வால் முன்பு 26 கிலோ அரிசி மூட்டை வாங்கியவா்கள் தற்போது 10 கிலோ மட்டுமே வாங்குவதாக அரிசி வியாபாரி ஆனந்த்ராஜ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications

