2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி சுமார் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று இன்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். இவர் பதவிக்கு வந்ததிலிருந்து மக்களுக்கு அவ்வளவு எதிர்பார்ப்புகள். இந்நிலையில் முதல்வர் விஜய் தனது பதவியேற்பு நிகழ்ச்சியின் போது தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட இருப்பதாக தெரிவித்தார்.
அவர் சொன்னதைப் போலவே கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையின் மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த நிதி பொறுப்புகள் ரூ.13.18 லட்சமாக உயர்ந்திருப்பதை காண முடிகிறது. இதில் தமிழகத்தின் நேரடி கடன் மட்டும் ரூ.10 லட்சம் கோடியை நெருங்கி இருக்கிறது.
அறிக்கையின் படி, கடந்த ஐந்தாண்டு கால மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை கிட்டத்தட்ட 2 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை கணக்கிட்டு பார்த்தால் தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் சராசரியாக ரூ.1.28 லட்சம் கடன் சுமை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதோடு தற்போது நிலுவையில் இருக்கும் கடன் 28.2 சதவீதமாக இருக்கிறது. அரசுக்கு நிதி பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உள்ளது.

தமிழகத்திற்கு கிடைக்கும் ஒவ்வொரு 1 ரூபாய் வருமானத்திலும் அரசு ரூ.22.8 பைசா வட்டி செலுத்துவதற்கே செலவிடுவதாகவும், இதனால் கடன் சுமை அதிகரித்து அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 4.8 லட்சம் கோடியாக இருந்த நேரடி கடன் தற்போது கிட்ட ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதோடு பட்ஜெட்டில் சேர்க்கப்படாத பிற கடன்கள், அரசு அறிவித்த விஷயங்கள் மற்றும் இதர பொறுப்புகளை எல்லாம் சேர்த்து பார்த்தால் தமிழகத்தின் உண்மையான நிதி சுமை ரூ.13.18 லட்சம் கோடியாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் 5.45 சதவீதமாக இருப்பதாகவும், அரசின் கடன்கள் மற்றும் செலவுகளுக்கு இந்த வருவாய் போதுமானதாக இல்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு உற்பத்தி 2021 முதல் 2022-ஆம் ஆண்டில் இருந்ததை விட 8.32 சதவீதம் குறைந்திருப்பதாகவும், மாநிலத்தின் மூலதன செலவு ரூ.50,911 கோடியாக இருப்பதாகவும் மின்துறையில் ரூ.2.47 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்கள் சவாலாக இருக்கும் என்றும் ஊழலை ஒழித்து தமிழகத்தின் இந்த நிலையை சரி செய்வோம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications