இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாட்டை என்றைக்குமே அசைக்க முடியாது என சொல்லும் அளவுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கார், இருசக்கர வாகனங்கள், ஜவுளி , தோல் பொருட்கள் என பல துறைகளிலும் உற்பத்தி , ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர் சாதனைகளை படைத்து வருகிறது.
2025 ஆம் ஆண்டு ஜவுளித்துறை சார்ந்தவர்களுக்கு மிகவும் சவாலான ஒரு ஆண்டாகவே இருந்தது. ஏனெனில் இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஜவுளி அமெரிக்க சந்தைக்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய பொருட்களுக்கு 50% வரியை விதித்து பெரிய அதிர்ச்சியை தந்தது. இந்தியாவில் ஜவுளி உற்பத்தியில் முன்னணியில் இருக்கக்கூடிய தமிழ்நாடு இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது என கூறலாம்.

தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு , கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஜவுளி உற்பத்தியாளர்கள் மிக சவாலான சூழலை எதிர் கொண்டிருந்தனர். இந்த சவால்களை எல்லாம் கடந்து இந்தியாவிலேயே ஜவுளி உற்பத்தியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்து இருக்கிறது. நாட்டின் இறக்குமதி ஏற்றுமதி பதிவுகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. 2024-2025 ஆம் ஆண்டுக்கான இந்த அறிக்கையின் படி தமிழ்நாட்டில் இருந்து 7997.17 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் ஜவுளி ஏற்றுமதியில் முன்னிலையில் இருப்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது. அடுத்ததாக குஜராத் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. குஜராத் 2025 ஆம் ஆண்டில் 5646.01 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஜவுளியையும், மகாராஷ்டிரா 3083.28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஜவுளியையும் ஏற்றுமதி செய்துள்ளன.
ஒட்டுமொத்தமாக நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 21.84 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் 2020- 2021 ஆம் ஆண்டில் ஜவுளி ஏற்றுமதி என்பது 6,193.39 மில்லியன் டாலர்களாக தான் இருந்தது ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் அது 29 % அதிகரித்துள்ளது. இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் மாநிலமாக தொடர்ந்து தமிழ்நாடு தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு நான்கு ஆண்டுகளில் 29% ஜவுளி ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது என கூறியிருக்கிறார். மகாராஷ்டிரா, குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர் திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 2021 ஆம் ஆண்டில் இருந்ததை விட தற்போது 29 % உயர்ந்து இருப்பதாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications