இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் வேளையில், டெஸ்லாவுக்கு உதிரிப்பாகங்களை சப்ளை செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை தேடி வருகிறது.
மத்திய அரசு டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையை இந்தியாவுக்குக் கொண்டு வர பல வகையில் முயற்சி செய்து வரும் வேளையில், மாநில அரசுகள் டெஸ்லா-வுக்கு உதிரிப்பாகங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களை ஈர்க்கும் பணியில் தீவிரமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், பிற்காலத்தில் டெஸ்லா இந்தியாவுக்கு வர திட்டமிட்டால் கட்டாயம் அதன் சப்ளையர்கள் அதிகம் இருக்கும் பகுதிக்கு தான் செல்லும்.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநில உட்பட பல மாநில அரசுகள் டெஸ்லா நிறுவனத்தின் சப்ளையர்களை ஈர்க்கும் பணியில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் 3 முக்கிய சப்ளையர் நிறுவனங்கள் சமீபத்தில் குஜராத்துக்கு சென்று தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தைப் பார்வையிட்டு உள்ளனர். இந்த சப்ளையர் நிறுவனங்கள் பல ஆட்டோமொபைல் பொருட்களை தயாரிப்பதாகவும், டெஸ்லா மட்டும் அல்லாமல் பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் முக்கிய சப்ளையராக இருப்பது தெரிய வந்துள்ளது.
இதேபோல் தமிழ்நாட்டில் டெஸ்லா நிறுவனத்தின் 2 முக்கிய ஐரோப்பிய சப்ளையர் நிறுவனங்கள் தனது தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. தமிழ்நாடு ஏற்கனவே ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஹப் ஆக உள்ளது. ஏற்கனவே சில பல டெல்ஸா சப்ளையர்களை தமிழ்நாடு கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்டு ரோவர் , வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் நிறுவனமும் கார் தொழிற்சாலை அமைத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் எந்தொரு ஆட்டோமொபைல் சப்ளையராக இருந்தாலும் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைப்பது தான் லாபகரமானதாக இருக்கும்.
இதனால் அடுத்த 5 -8 மாதத்தில் பெரும் எண்ணிக்கையில் ஆட்டோமொபைல் சப்ளையர்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்கவும், விரிவாக்கமும் செய்ய வாய்ப்பு உள்ளது. இது கட்டாயம் பின்னாளில் டெஸ்லா-வை கவரும் வாய்ப்பாக அமையும் என்பதைத் தமிழ்நாடு அரசின் திட்டமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications