தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு இலவச முழு உடல் பரிசோதனை , வயதானவர்களுக்கு இலவச காப்பீடு உள்ளிட்ட மருத்துவ துறை சார்ந்த பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதியவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் (Chief Minister's Elderly Health Insurance Scheme) என்ற புதிய திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ், சட்டமன்றத்தில் சுகாதார துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

இதன்படி 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து முதியவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். தமிழகத்தில் சுமார் 38 லட்சம் முதியவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. வருமான வரம்பு எதுவும் இல்லாமல் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே இந்த திட்டம் பொருந்தும். பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை, 70 வயதை எட்டிய அனைவரும் இத்திட்டத்தில் இணையலாம்.
இந்த திட்டத்தில் இணையும் முதியோருக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு அங்கீகரித்த தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா உயர்தர மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு கொள்ளலாம். இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் புற்றுநோய் சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் , பிற தீவிர மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான உயர்தர மருத்துவ சிகிச்சைகள், பல்வேறு நோய் கண்டறியும் சோதனைகள் இதன் மூலம் மேற்கொள்ளலாம். இதற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
தற்போது நடைமுறையில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஆண்டு வருமான வரம்பு உள்ளது. ஆனால், முதியவர்கள் அடிக்கடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய சூழல் இருப்பதால், அவர்களை காக்கும் நோக்கில் வருமான வரம்பை நீக்கி இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதியோர் காப்பீட்டுத் திட்டத்துடன் சேர்த்து, முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கையாக 'நலம் 360' என்ற திட்டத்தையும் அமைச்சர் அறிவித்துள்ளார். இதன்படி 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் ஆண்டுதோறும் இலவசமாக முழு உடல் பரிசோதனை (Master Health Check-up) செய்துகொள்ளலாம். இதில் ரத்த அழுத்தம், இசிஜி, ஹீமோகுளோபின், ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்ட 14 அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படும். இதற்காக அரசு 51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் இந்த முழு உடல் பரிசோதனை திட்டம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இனி இலவசமாக அடிப்படை உடல் பரிசோதனையை மேற்கொள்ளலாம். தமிழக அரசின் இந்த முன்னெடுப்புகள், முதியோர்களின் மருத்துவ செலவு சுமையை குறைப்பதோடு, பொதுமக்களிடையே ஆரோக்கியமான வாழ்வை ஊக்குவிக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

