தமிழ்நாட்டின் பல்வேறு தொகுதிகளிலும் செயல்படக்கூடிய சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கக்கூடிய 60 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் புதிய சுங்க கட்டணம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த மக்கள் மாநிலத்திற்குள் பயணம் செய்வதற்கும் வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கும் இனி கூடுதல் கட்டணத்தை சுங்க கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். தமிழ்நாட்டின் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய பல்வேறு பிரதான நெடுஞ்சாலை வழித்தடங்களிலும் இந்த சுங்க கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்திருக்கிறது. நியூஸ் 18 வெளியிட்டுள்ள தகவலின் படி பரனூர், அத்தூர், வானகரம், சூரப்பட்டு என சென்னை சுற்றியுள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணம் உயர்ந்திருக்கிறது.

அதேபோல சமயபுரம், கப்பலூர் ,நாங்குநேரி என தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய நெடுஞ்சாலை வழித்தடங்களிலும் திருச்சி -சேலம் , சென்னை - விழுப்புரம் , வேலூர் - திருவண்ணாமலை, வேலூர் -தர்மபுரி, கோயம்புத்தூர் - சேலம் செல்லும் வழித்தடங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்திருக்கிறது. பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு முறை பயணத்திற்கான கார்களுக்கான சுங்க கட்டணம் 75 ரூபாய் என்று அளவிலேயே நீடிக்கிறது ஆனால் கனரக வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுவே round trip-களுக்கு கூடுதலாக 5 முதல் 15 ரூபாய் வரை செலுத்த வேண்டி இருக்கும்.
தமிழ்நாட்டில் தற்போது 77 தேசிய நெடுஞ்சாலைகள் பயன்பாட்டில் இருக்கின்றன இதில் 60 தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளிலும் செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து சுங்க கட்டணம் உயர்த்தப்படும். அதே போல சுங்க சாவடிகளை சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் தங்கி இருக்கும் மக்களுக்கான சுங்க சாவடி பாஸ் அதாவது டோல் பாஸ் கட்டணம் 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
உதாரணமாக சென்னையில் இருந்து மதுரைக்கு சென்று வருவதற்காக சுங்க கட்டணம் முன்பை விட 80 ரூபாய் உயர்ந்துள்ளது, சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்பவர்களுக்கு சுங்க கட்டணம் 100 ரூபாயாக உயர்ந்துள்ளது, திருச்சி சேலம் இடையிலான பயணத்திற்கான டோல் கட்டணம் 40 லிருந்து 50 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கார்களை விட கனரக வாகனங்களுக்கு தான் இனி கூடுதல் செலவாகும். இந்த சுங்க கட்டண உயர்வு குறித்து வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்து இருக்கின்றனர். இந்த கட்டணத்தை பயணிகள் மீதுதான் சுமத்த போவதாக கூறி இருக்கின்றனர். இதனால் வெளியூர் பயணம், வாடகை கார் பயணம் மற்றும் நீண்ட தூரம் சுற்றுலா பயணங்களுக்கான கட்டணம் 300 இல் இருந்து 800 ரூபாய் வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக சுற்றுலா வாகனங்களை இயக்கக்கூடிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
லாரி உரிமையாளர்கள் சங்கம் சரக்கு போக்குவரத்து கட்டணம் உயர்ந்து பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர போகிறது என தெரிவித்திருக்கின்றனர்.ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலைகள் 2 வாரத்திலேயே லிட்டருக்கு 6 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளன. இந்த சூழலில் சுங்க கட்டணமும் உயர்ந்திருப்பது மக்களை பேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications

